இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தும் தி.மு.க.வினர் கட்டாய தமிழ் மொழியை கொண்டு வராதது ஏன்?. * திருச்சி பொதுக் கூட்டத்தில் அண்ணாமலை கேள்வி…
மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்து, திருச்சியில் முதல் மண்டல பொதுக்கூட்டம் மன்னார்புரம் பகுதியில் நேற்று (மார்ச் 23) நடந்தது. கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த நிர்வாகிகள் தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். இறுதியாக அண்ணாமலை பேசியதாவது:- தமிழகத்தை விட்டு வெளியே சென்றால், இந்த நாட்டின் வளர்ச்சி இவர்களுக்கு தெரியும். மக்கள் மனநிலை என்னவென்றே தெரியாமல், ஆட்சியில் இருப்பதால் தி.மு.க.வினருக்கு பயம். அதனால், தினமும் புது புது பொய்யை கட்டவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கின்றனர். மோடி பிரதமரானவுடன் மாணவ, மாணவியரின் முன்னேற்றம் சார்ந்த கல்விக் கொள்கையை கொண்டு வர வேண்டும் என்று ஒரு கமிட்டி அமைத்தார். கடந்த 2019 மே 31ல், கஸ்துாரி ரங்கன் புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை தயாரித்துக் கொடுத்தார். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழியில் தான் படிக்க வேண்டும் என்பது தேசிய கல்விக் கொள்கையின் முதல் அம்சம். இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தும் தி.மு.க.,வினர் கட்டாய தமிழ் மொழியை கொண்டு வரவில்லை. ஆனால், மோடி கொண்டு வந்துள்ளார். 6, 7, 8ம் வகுப்புகளுக்கு தமிழ் மொழியில் சொல்லிக் கொடுப்பதற்கான முயற்சி எடுப்போம் என்பது இரண்டாவது அம்சம். புதிய கல்விக் கொள்கையில், மூன்றாவதாக கட்டாயம் ஹிந்தி படிக்க வேண்டும் என்று இருந்தது. அதை மாற்றி, ஏதேனும் ஒரு இந்திய மொழியை படிக்க வேண்டும் என்று கொண்டு வந்தவர் மோடி. தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி ஆட்சியில் இருந்த போது, மூன்றாவது மொழி ஹிந்தியாகத் தான் இருந்தது. மார்ச் 5ல் தேசிய கல்விக் கொள்கைக்காக கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டது.
கடந்த 18 நாட்களில், 26 லட்சம் பேர் கையெழுத்து போட்டுள்ளனர். 90 நாட்களில் ஒரு கோடி கையெழுத்து என்ற இலக்குடன் இயக்கம் துவங்கப்பட்டது. இதே வேகத்தில் சென்றால் இரண்டு கோடி கையெழுத்தை எட்டி இருப்போம். தி.மு.க.,வினர் யாருமே படித்து அதிகாரத்துக்கு வராததால், கல்வியின் சக்தி தெரியவில்லை. திமுகவினர் ஒன்றாக சேர்ந்து, நம்முடைய குழந்தைகள் என்ன படிக்க வேண்டும், என்று தீர்மானிக்க போகின்றனராம். சிறை சென்றவர்கள், மக்கள் பணத்தை கொள்ளை அடித்தவர்கள், ரவுடிகளாக இருந்தவர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் அனைவரும் சேர்ந்து தமிழகத்தின் கல்விக் கொள்கையை உருவாக்க போகிறார்களாம். அதை ஏற்றுக்கொள்வீர்களா? அதனால், புதிய கல்விக் கொள்கை பற்றி மக்களுக்கு விளக்குவதை பா.ஜ., கட்சி புரட்சியாக செய்து கொண்டிருக்கிறது.
புதிய கல்வி கொள்கை நடைமுறைக்கு வந்தால், ப்ளஸ் 1 வகுப்பில் ஆங்கிலம், கொரியன், ஜப்பானீஸ், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஸ், ரஷ்யன், போர்ச்சுகீசியம் போன்ற மொழிகள் படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். அரசு பள்ளியில் படித்தாலும், தனியார் பள்ளியில் படித்தாலும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்பது தான் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படை நோக்கம். தி.மு.க.,வினர் அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு தரமில்லாத கல்வியை கொடுத்து, போஸ்டர் ஒட்டுவதற்கு தயார் படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
அனைத்து தனியார் பள்ளிகளிலும் மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகிறது.ஆனால், அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகள் இரண்டு மொழி மட்டும் தான் படிக்க வேண்டும் என்றால் என்ன நியாயம்? தமிழகம் வளராமல் இருப்பதற்கு காரணம் இங்கு ஆட்சியில் இருப்பவர்கள் தான். தமிழக பள்ளிகளில் பொதுத் தேர்வில் தமிழில் தேர்ச்சியடையாதவர்களின் எண்ணிக்கை லட்சங்களில் இருக்கிறது. இப்படிப்பட்ட கல்வியை கொடுத்து விட்டு, தமிழகம் வளர்ச்சி அடையும், என்று கனவு கண்டு கொண்டிருக்கின்றனர். தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுத்து விட்டு, அரசியல் லாபத்திற்காக அண்டை மாநில தலைவர்களை வரவழைத்து உப்புச் சப்பு இல்லாத கூட்டம் நடத்தி இருக்கின்றனர். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடக்காது, விகிதாச்சார அடிப்படையில் தான் நடக்கும் என்று பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தெளிவாக கூறி விட்டனர். இதன்படி பார்த்தால் எத்தனை தொகுதிகள் அதிகரித்தாலும் தமிழகத்திற்கு 17.7 சதவீதம் தொகுதிகள் தான். தென் மாநிலங்களுக்கு விகிதாச்சாரம், வட மாநிலங்களுக்கு மக்கள் தொகை அடிப்படையிலா? என்று கேட்கும் முட்டாள்களாக தி.மு.க.,வினர் உள்ளனர். இதையெல்லாம் பார்க்க வேண்டிய துர்பாக்கியம் தமிழக மக்களுக்கு உள்ளது. இதையெல்லாம் உடைத்து தகர்த்து எறிய வேண்டிய நேரம் வந்துவிட்டது. கடந்த ஆண்டில் மட்டும் ஒரு லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி இருக்கிறோம். தமிழகத்தின் மொத்த கடன் ஒன்பது லட்சம் கோடி ரூபாய். தமிழகத்தில் வரலாறு காணாத மோசமான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.,கட்சி ஆட்சிக்கு வரும் போது தனியார் பள்ளியிலும், அரசு பள்ளியிலும் சம கல்வி தான் நடைமுறைப்படுத்தப்படும். பா.ஜ., ஆட்சி வந்தால், தனியார் பள்ளிகளுக்கு அனுமதியே கொடுக்கப்பட மாட்டாது. அரசு பள்ளிகளை மேம்படுத்தி, பி.எம்., ஸ்ரீ பள்ளிகளாக மாற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில், கட்சியின் மாநில இணை பொருளாளர் சிவசுப்பிரமணியம், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு, அரியலூர் மாவட்ட தலைவர் பரமேஸ்வரி ஆனந்தராஜு, திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து, மாநில செயலாளர் பொருளாதார பிரிவு காந்தி மார்க்கெட் எஸ்.வி.வெங்கடேசன், ஊடகப்பிரிவு சிவகுமார், லீமா சிவகுமார், திருச்சி மாநகர் மாவட்ட முன்னாள் தலைவர் ராஜசேகரன், மாநில செயற்குழு உறுப்பினர் இந்திரன், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் ஸ்ரீரங்கம் முரளி, மாவட்ட துணை தலைவர் வாசன் வேலி சிவகுமார், மகேந்திரன், வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் வக்கீல் மாரியப்பன், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு, அரியலூர் மாவட்ட தலைவர் பரமேஸ்வரி ஆனந்தராஜு, புதுக்கோட்டை அரண்மனை ராதா நிரஞ்சனி தொண்டைமான், வக்கீல் சத்தியமூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் லோகநாதன், சிந்தனையாளர் பிரிவு மாவட்ட தலைவர் ஜிடி .தினகர், மாவட்ட செயலாளர் ரகுநாதன், மாவட்ட துணை தலைவர் பட்டாசு கண்ணன், திருச்சி மாநகர் மாவட்ட முன்னாள் தலைவர் பார்த்திபன், வர்த்தகப் பிரிவு மாநில செயலாளர் எம்.பி.முரளிதரன், திருச்சி புறநகர் மாவட்ட நிர்வாகிகள் ரவீந்திரன், முத்துசாமி, முத்துலட்சுமி, மணி, மகாராஜன், பொன்னுவேல், சரவணன், ஆனந்தன், வாசு, முத்துக்குமார், கேசவன், உமாபாண்டியன், பெரியசாமி, சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருச்சி புறநகர் மாவட்டத் தலைவர் அஞ்சா நெஞ்சன் நன்றி கூறினார்.
Comments are closed.