திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் காந்திநகர் கொடியாலம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 34). இவர் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு உறவினர்களுடன் திரண்டு வந்து சூப்பிரண்டிடம் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில், ‘எனது அண்ணன் பாலசுப்பிரமணியன் கடந்த ஜூலை மாதம் 3-ந் தேதி திருவெறும்பூர் பாலாஜிநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கட்டிட பணியில் ஈடுபட்டபோது, கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை செய்து, ஆட்டோவில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி விட்டனர். பின்னர் அவருக்கு உடல்நிலை மோசமானது. இதையடுத்து மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்தோம். ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அப்போது போலீசார் எங்களது குடும்பத்துக்கு உரிய இழப்பீட்டுத்தொகை பெற்றுத்தருவதாக கூறினார்கள். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், உரிய விசாரணை நடத்தாத போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.