Rock Fort Times
Online News

துறையூர் தொகுதி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 லஞ்சம்…* விவசாயிகளின் துயர் துடைப்பாரா துணை சபாநாயகர் ரவிசங்கர்?

திருச்சி மாவட்டம், துறையூர் தொகுதிக்குட்பட்ட சுற்று வட்டார பகுதிகளில் இயங்கிவரும் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில், நெல்மூட்டைகளை விற்பனை செய்யும் விவசாயிகளிடம், ஒரு மூட்டைக்கு சுமார் ரூ.40 வரை லஞ்சம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. மேலும், கொள்முதல் செய்யும் ஒரு மூட்டைக்கு ஒன்றரை கிலோ கூடுதல் எடை கேட்பது, “தூற்றுகிறோம்” என்ற பெயரில் மேலும் ஒன்றரை கிலோ நெல்லை பிடித்தம் செய்வது போன்ற முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டியிருக்கும் விவசாயிகள், லஞ்சம் வழங்க மறுத்தால் “நெல்லில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது” என்ற காரணத்தைக் கூறி கொள்முதல் செய்ய மறுப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.தமிழ்நாடு முழுவதும் செயல்படும் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் எந்தவிதமான கூடுதல் தொகையும் லஞ்சமாக பெறக் கூடாது. அப்படி பெறப்படும் நபர்கள் மீது தயவு தாட்சண்யம் இன்றி உடனடியாக சஸ்பெண்ட் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என உணவுத்துறை அமைச்சர் சுற்றறிக்கை வெளியிட்ட பிறகும் திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதியில் செயல்படும் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் இது போன்ற முறைகேடுகள் விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, இத்தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகருமான எம்.ரவிசங்கர் இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு விவசாயிகள் துயர் துடைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்