பட்டா நிலத்திற்கு பங்கம் – திருச்சி மாகராட்சியை கண்டித்து கலெக்டர் ஆபீஸ் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!
திருச்சி மாநகராட்சி 25-வது வார்டுக்கு உட்பட்டது உயர்கொண்டான் பகுதியில் உள்ள ஆதிநகர் மற்றும் சாந்த ஷீலா நகர். இங்கு சுமார் 40 வருடத்திற்கு மேல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருச்சி மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியராக இருந்த சாந்த ஷீலா வால் பட்டா வழங்கினார். இந்நிலையில், நகர்ப்புற விரிவாக்கம் என்ற பெயரில் இங்குள்ள குடியிருப்புகளையும், வீடுகளையும் இடிக்க முயற்சிக்கும் திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு பகுதிக்குழு சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆறுமுகம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநில குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மேற்கு பகுதி செயலாளர் ரபீக் அகமது, மாவட்ட குழு உறுப்பினர்கள் அன்வர் உசேன், சீனிவாசன் ஆகியோர் பேசினர். இதில் பகுதிக்குழு உறுப்பினர்கள் இருதயராஜ், நடராஜன்,செல்வம், விஜயலட்சுமி, ஹரிபாஸ்கர், சந்திரன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பகுதிக்குழு உறுப்பினர் பழனியப்பன் நன்றி கூறினார்.
Comments are closed.