நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் 3 மாதத்தில் வர இருக்கிறது. ஆட்சியை மூன்றாவது முறையாக தக்கவைக்க வேண்டும் என்று பாஜகவும், பாஜகவை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் கங்கணம் கட்டிக்கொண்டு தற்போது இருந்தே கட்சி பணிகளை துவங்கி விட்டனர். இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் திமுக, 3 தேர்தல் பணிக்குழுக்களை அமைத்துள்ளது. அதில் ஒரு குழு தங்களது கூட்டணியில் உள்ள கட்சியினுடைய தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இதற்கான முதல் கூட்டம் இன்று (28-01-2024) சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் கட்சியுடன் நடத்தியது. திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையில் திமுக தொகுதி பங்கீடு குழுவைச் சேர்ந்த அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ. பெரியசாமி எம்.ஆர் . கே.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, ஆ. ராசா எம்.பி, திருச்சி சிவா எம்.பி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜய்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, செல்வப் பெருந்தகை ஆகியோர் இடம் பெற்றனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் கூறுகையில், மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் கட்சியுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிந்தது. 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக நிற்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.
விருப்பப்பட்டியல் எதையும் காங்கிரஸ் கட்சி வழங்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என உதயநிதி கேட்பதில் தவறில்லை. உதயநிதி கேட்டது போல இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது பற்றி முதல்- அமைச்சரிடம் தெரிவிப்பேன் என்றார். பேச்சுவார்த்தைக்கு பிறகு கே.எஸ். அழகிரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன், காங்கிரஸ் மேலிட குழு பேச்சுவார்த்தை நடத்தியது.
திமுகவுடன் நடந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. திமுகவிடம் நாங்கள் தொகுதி பட்டியல் எதையும் வழங்கவில்லை என்றார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.