ஆடி அமாவாசையை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்களிடம் தலா ரூ.1000 கேட்டு இடைத்தரகர்கள் அடாவடி…( ஆடியோ இணைப்பு)
சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும், முதன்மையானதுமான சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். ஆடி அமாவாசையான இன்று(04-08-2024) அதிகாலை முதலே திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது பெரம்பலூர், அரியலூர், சேலம், கோவை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து குவிந்தனர். பின்னர் அவர்கள் அம்மனை தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்களிடம் இடைத்தரகர்கள் அணுகி ஒரு நபருக்கு 1,000 ரூபாய் கொடுத்தால் 10 நிமிடத்தில் சாமியை தரிசனம் செய்துவிட்டு வந்துவிடலாம் என்றும், தரிசனம் செய்து வந்த பிறகு காசு கொடுத்தால் போதும் என பேசி உள்ளனர். மேலும், 5 பேர் இருந்தால் ஒருவருக்கு இலவசம் மீதமுள்ள நான்கு பேருக்கு 4000 கொடுத்தால் போதும் என அடாவடி செய்துள்ளனர். இதேபோன்று கோயிலை சுற்றி 50க்கும் மேற்பட்டோர் கிராக்கி என்ற பெயரில் நின்று கொண்டு ஆயிரம் ரூபாய் பேரம் பேசி அழைத்துச் சென்றுள்ளனர். இதனை காவல்துறையினரும் கண்டு கொள்ளாமல் அவர்களை உள்ளே அனுமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் மற்ற பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர். நாங்கள் எவ்வளவு நேரம் நின்றாலும் பரவாயில்லை, காசு கொடுக்க மாட்டோம் என கறாராக பேசி அனுப்பி உள்ளனர். இதற்கு முன்பு இருந்த கோவில் இணை ஆணையர் கல்யாணி கிராக்கி என்று பலரை காசு வாங்கிக் கொண்டு உள்ளே அழைத்து செல்வதை தடுத்து கட்டுப்படுத்தினார். அதேபோல தற்போதைய ஆணையரும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed.