Rock Fort Times
Online News

பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்: தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைதாகிறாரா? வீட்டில் போலீஸ் குவிப்பு…!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ. சி.அருள் விக்னேஷ் ஆபாச வாட்ஸ்அப் மெசேஜ்களை அனுப்பியதாகவும், அவரிடம் தகாத முறையில் பேசியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரத்தில் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் ஆர்.திரிசூலி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று (நவம்பர் 23) நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட ஆட்சியரிடமிருந்து எந்தப் புகாரும் வரவில்லை என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் தலைமைச் செயலாளரிடம் நேரடியாக விளக்கம் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு அரசு தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

தவெக எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு:

இதனிடையே, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று(24-11-2026) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் கடந்த ஜூலை மாதமே புகார் அளித்திருப்பது தொடர்பான விவரங்கள் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டன. மேலும் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, “கடந்த ஜூலை மாதமே புகார் அளிக்கப்பட்ட நிலையில், பல மாதங்களாக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என்று நீதிபதி வி.லட்சுமிநாராயணன் கேள்வி எழுப்பினார். மேலும், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி குறித்து அவதூறான குற்றச்சாட்டுகளை பரப்பியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு, தடை மற்றும் குறைதீர்ப்புச் சட்டம், 2013-ன் கீழ் உள் புகார்கள் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார். இந்தக் குழுவில் ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டுமே இடம்பெறக் கூடாது. பிற துறைகளைச் சேர்ந்தவர்களும் இடம்பெற வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான புகார் குறித்து எஸ்பியை விட உயர் பொறுப்பில் உள்ள ஐஜி அல்லது டிஐஜி கண்காணிப்பில் விரிவான விசாரணை நடத்த வேண்டும்; வடக்கு மண்டல ஐஜி பிரவீன்குமார் அபிநவ் இந்த வழக்கு விசாரணையை மேற்பார்வையிட வேண்டும்; இந்த விசாரணை அறிக்கையை ஒரு மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி லட்சுமிநாராயணன் உத்தரவிட்டுள்ளார்.

கைதாகிறாரா?

இந்த நிலையில், தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷின் வீட்டில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் .மாவட்ட ஆட்சியரின் புகார் தொடர்பாக உயர்நீதிமன்றம் சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், அருள் விக்னேஷ் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்