பெண் ஆட்சியர் புகார்: கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ.வை கைது செய்து விசாரிக்க வேண்டும்… * மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்…!
இனியும் தாமதிக்காமல், கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்” என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
“ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ-வின் ஒழுங்கீனமான செயல் குறித்து மாவட்ட ஆட்சியர் முறையாகப் புகார் அளித்திருக்கிறார். இத்தகைய ஒரு சம்பவம் நடைபெற்றதாக பல வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளிவரத் தொடங்கியபோதே, முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மாவட்ட ஆட்சியரை அழைத்துப் பேசி இருக்க வேண்டும். அவருக்கு உறுதுணையாக அரசு இருக்கும் என்ற நம்பிக்கை அளித்திருக்க வேண்டும். தவறிழைத்த சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்து, சட்டநடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பிற்கும், ஆட்சி மாண்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் எந்த ஒரு அரசும் இதைத்தான் செய்திருக்கும். ஆனால், தன் கட்சி சட்டமன்ற உறுப்பினரையும் தன் மைனாரிட்டி அரசையும் காப்பாற்றினால் போதும் என்ற நோக்கத்தில் இவர்கள் இந்த சம்பவத்தை மறைக்க அனைத்து வகைகளிலும் முயற்சித்ததால்தான், பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் முறையாகப் புகார் அளிக்கவே இத்தனை நாட்கள் ஆகியிருக்கின்றன. ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால் தமிழ்நாட்டில் வாழும் சராசரிப் பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்ற கேள்வி கவலை அளிக்கிறது. இதில், பதவிக்கு மாரடிக்கும் சில கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்காமல், எம்எல்ஏ பாவம் என்று முட்டு கொடுத்தது கேவலத்தின் உச்சம். பாலியல் குற்றங்களிலும், போதைப் பொருள் கடத்தலிலும், கொள்ளைச் சம்பவங்களிலும் தவெகவினர்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள் என நாங்கள் தொடர்ந்து சொல்லி வருவது ஒவ்வொரு நாளும் உண்மையாகி வருகிறது.
இனியும் தாமதிக்காமல், கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்” இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Comments are closed.