Rock Fort Times
Online News

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது எஸ்.பி.யிடம் பெண் ஆட்சியர் புகார்…!

தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியர் புகார் அளித்துள்ளார். தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றதாகவும், தேவையற்ற மற்றும் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் எம்எல்ஏ மீது பெண் ஆட்சியர் குற்றம் சாட்டியுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில், பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக பெண் வழக்கறிஞரான ஆர்.த்ரிசூலி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிபதி வி.லட்சுமி நாராயணன் நேற்று விசாரித்தார். அப்போது, செய்திதாள்களில் வெளிவந்த செய்தியின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு எப்படி உத்தரவிட முடியும், ஆபாச குறுஞ்செய்தி தொடர்பாக மாவட்ட ஆட்சியர் எதுவும் புகார் அளித்துள்ளாரா, அதற்கான ஆதாரங்கள் உள்ளதா என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு காவல் துறை தரப்பில், இந்த விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், தலைமைச் செயலர் உள்பட யாரிடமிருந்தும் எந்த புகாரும் வரவில்லை என தெரிவிக்கப்பட்டது.

அப்போது மனுதாரர் தரப்பி்ல், இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் டிஜிபியிடம் விளக்கம் கோரியுள்ளது. ஆளுங்கட்சி எம்எல்ஏ என்பதால் அனைத்து உயரதிகாரிகளும் அவரை பாதுகாப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அதற்கு நீதிபதி, “தேசிய மகளிர் ஆணையமும் ஊடகங்களில் வெளிவந்த செய்தியின் அடிப்படையில் தான் விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது உண்மை என்றால் அது துரதிர்ஷ்டவசமானது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஆட்சியர் மற்றும் தலைமைச் செயலரிடம் விளக்கம் கேட்டு, அரசு தரப்பு வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை இன்று (நவ.24) தள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்