Rock Fort Times
Online News

புதுக்கோட்டை அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து…- 22 பயணிகள் காயம்!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் பழனிக்குச் சென்ற அரசுப் பேருந்து, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சாலையில் இன்று (நவ.12) காலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 22 பயணிகள் காயமடைந்தனர். 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அந்தப் பேருந்து, அன்னவாசல் அருகே உள்ள பெருஞ்சுனை பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட முயன்ற ஓட்டுநர், எதிர்பாராதவிதமாகப் பேருந்தின் கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பேருந்து கவிழ்ந்ததில் உள்ளே இருந்த பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கி அலறினர். இதையடுத்து அங்கு வந்த பொதுமக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பேருந்தின் பின்பக்கக் கண்ணாடியை உடைத்து உள்ளே சிக்கியிருந்த பயணிகளைப் பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் காயமடைந்த 22 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்