Rock Fort Times
Online News

திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றம்… ‘அரோகரா’ கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்…!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டுக்கான திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 12-ம் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 15-ம் தேதி 63 அடி உயர தங்கக் கொடிமரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வுகளாக சுவாமி – அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து வெள்ளி ரத உற்சவம், மகா தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதன் தொடர்ச்சியாக, இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அண்ணாமலையார் சன்னதியில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் மற்றும் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் அதிகாலை 4 மணியளவில் ஆகம விதிகளின்படி பரணி தீபம் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என முழக்கமிட்டு வழிபட்டனர். பரணி தீபத்தைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணியளவில் திருவண்ணாமலையில் உள்ள 2,668 அடி உயர உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்