தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை கிராமப் பகுதி சமுதாய சுகாதார செவிலியர் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் 300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று(25-06-2024) கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்ட தலைவி காயத்ரிதேவி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், சங்கத்தின் செயல் தலைவி கோமதி, துணைத் தலைவி விமலாதேவி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார்கள். துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தாய்மை துணை செவிலியர் பயிற்சி நிறைவு செய்தவர்களை காலியாக உள்ள பணியிடங்களில் பணி அமர்த்த வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்ப புதிதாக உருவாக்கப்பட்டுள்ள துணை சுகாதார நிலையங்களில் எம்.எல்.எச்.பி. செவிலியர்களை பணியமர்த்தும் கருத்துருவை கைவிட்டு, கிராம சுகாதார செவிலியரை பணி நியமனம் செய்ய வேண்டும். குடும்ப விவரங்களை பதிவேட்டில் கணக்கெடுத்து பதிவு செய்ய கால அவகாசம் வழங்காமல் நாள்தோறும் கூகுளில் தரவுகளை உள்ளீடு செய்யச் சொல்வதை நிறுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடந்தது.
Comments are closed.