மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்காதது ஜனநாயக படுகொலை-வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு துரை வைகோ பேட்டி…!
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கு வருகிற ஏப்ரல் மாதம் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ போட்டியிடுகிறார். இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கியது. அன்றிலிருந்து இதுவரை திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட பெண் உட்பட 3 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர். இந்தநிலையில் திருச்சி தொகுதியில் போட்டியிடும் துரை வைகோ இன்று(25-03-2024) கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரதீப்குமாரிடம் மனு தாக்கல் செய்தார். அப்போது திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், திருச்சி கிழக்கு திமுக செயலாளர் மு.மதிவாணன் மற்றும் பலர் உடன் இருந்தனர். வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ம.தி.மு.க முதன்மை செயலாளர் துரை வைகோ நிருபர்களிடம் கூறுகையில், பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கி உள்ளது. ஆனால் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க, வி சி.க விற்கு சின்னம் இதுவரை ஒதுக்கவில்லை. இது ஜனநாயக படுகொலை. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போல தேர்தல் ஆணையமும் பா.ஜ.க விற்கு ஆதரவாக தான் இருக்கிறது என்றார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.