9 லட்சம் மாணவர்கள் எழுதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…!
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (மார்ச் 26) தொடங்குகிறது. இத்தேர்வை 9.38 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். பிளஸ்- 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் தொடங்க 1ம் தேதி தொடங்கி 22-ம் தேதி நிறைவடைந்தது. மார்ச் 4-ல் தொடங்கிய பிளஸ் -1 பொதுத் தேர்வு இன்றுடன் (மார்ச் 25) நிறைவடைகிறது.
அதனைத்தொடர்ந்து, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (மார்ச் 26) தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. 12,616 பள்ளிகளில் இருந்து 9.10 லட்சம் மாணவ- மாணவிகள், 28,827 தனி தேர்வர்கள், 235 சிறை கைதிகள் உட்பட மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக, மாநிலம் முழுவதும் 4,107 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே… நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள்.
பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதிசெய்யுங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.