Rock Fort Times
Online News

திருச்சியில் 2 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை…!

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பை சேர்ந்தவர்கள் இந்தியாவிற்கு எதிரான சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனரா? என்று தேசிய புலனாய்வு அதிகாரிகள் மற்றும் உளவுத்துறையினர் கண்காணித்து  வருகின்றனர்.  அந்தவகையில் தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பில் திருச்சி கோட்டத் தலைவராக இருந்த அமீர் பாஷா திருச்சி ஜேகே நகரில் தனது தந்தை சர்தார் வீட்டில் வசித்து வந்தார். தற்போது திருச்சி ஏர்போர்ட் சத்தியமூர்த்தி நகரில் வாடகை வீட்டில் குடியிருந்துவரும் நிலையில் என்ஐஏ அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.  அமீர்பாஷா, திருச்சி காந்தி மார்க்கெட்டில் ரெடிமேட் ஷோரூம் வைத்துள்ளார். தொடர்ந்து அவரது செல்போன்களை ஆய்வுசெய்துவந்த உளவுத்துறை மற்றும் என்ஐஏ அதிகாரிகள் இன்றையதினம்  (01-08-2024) அவரது வீட்டில் காலை 6-15 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை ஒட்டி அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதேபோன்று திருச்சி வாழவந்தான் கோட்டையில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் பொறுப்பாளராக இருந்தவரும், தற்போது எஸ்டிபிஐ கட்சியின் திருச்சி மாவட்ட பொது செயலாளராக இருந்துவரும் சித்திக் என்பவரது வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  இதேபோல,  தஞ்சை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் இரு இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்னாள் நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்