திருச்சி, மலைக்கோட்டை பகுதியில் இடிந்து விழும் நிலையில் நன்றுடையான் விநாயகர் திருக்கோயில்- இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா? ( வீடியோ இணைப்பு)
திருச்சி, மலைக்கோட்டை பகுதியில் உலகப் புகழ்பெற்ற தாயுமானவர் சுவாமி கோவில், நாகநாதர் சுவாமி கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்கள் உள்ளன. அதேபோல திருச்சி இபி ரோடு, தேவதானம், கீழபுலிவார்டுரோடு பகுதியில் நன்றுடையான் விநாயகர் கோவிலும் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சக்தி வாய்ந்த துர்க்கை அம்மன், மனித உருவ தோற்றத்தில் இருக்கும் ஆதி விநாயகர், சிவன், நந்தி போன்ற சுவாமி சிலைகளும் இருக்கின்றன. மேலும், ஆஞ்சநேயர் விநாயகர் ஒரே சிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பம்சமாகும். இந்த கோவிலுக்கு தினமும் திரளான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். வெள்ளிக்கிழமைகளில் காலை 10-30 மணி முதல் 12 மணி வரை விளக்கு போட இடம் இல்லாத அளவுக்கு கூட்டம் அதிகரித்து காணப்படும். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் போதிய பராமரிப்பு இல்லாததால் மிகவும் பழுதடைந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இடிந்து விழும் தருவாயில் இருக்கிறது. இதனால், பக்தர்கள் மிகவும் அச்சத்துடனேயே சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்தக் கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பு நாகநாத சுவாமி கோவில் வசம் உள்ளது. நன்றுடையான் விநாயகர் கோவிலை சீரமைக்க கோரி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கல்யாணி, லட்சுமணன், நாகநாதர் சுவாமி கோவில் இ.ஓ. கீதா ஆகியோரிடம் பக்தர்கள் சார்பில் 50க்கும் மேற்பட்ட மனுக்கள் அளிக்கப்பட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திருச்சியில் கடந்த சில நாட்களாக பெய்த அடைமழையின் காரணமாக கோவில் மேலும் பழுதடைந்து மேற்கூரையில் உள்ள சிமெண்ட் காரைகள் பெயர்ந்து பக்தர்களின் மீது விழுகின்றன. ஆகவே, ஏதேனும் விபரீத சம்பவங்கள் ஏற்படுவதற்கு முன்பாக இனியும் காலம் தாழ்த்தாமல் கோவிலை சீரமைக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்த பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed.