வருகிற 31 மற்றும் 1-ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி வருகை…!
ஒலிம்பிக் அகாடமி, ஜல்லிக்கட்டு மைதானம் அமைய உள்ள இடங்களை பார்வையிடுகிறார்
வருகிற 31ம் தேதி மற்றும் 1-ம் தேதி ஆகிய இரு நாட்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி வருகை தர உள்ளார். இதற்காக சென்னையிலிருந்து திருச்சிக்கு புதன்கிழமை பிற்பகல் வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். பின்னர் தனியார் மருத்துவமனை நிகழ்வில் பங்கேற்றுவிட்டு, பல்வேறு புதிய திட்டங்களுக்காக தேர்வு செய்த இடங்களை ஆய்வு செய்கிறார். திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்ததையடுத்து பஞ்சப்பூர் பகுதியில் அடையாளம் காணப்பட்ட 50 ஏக்கர் இடத்திற்கு பதிலாக திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை மாவட்ட வீரர்களின் வசதிக்காக திருவெறும்பூர் ஒன்றியம் எலந்தப்பட்டி கிராமத்தில் தேர்வாகியுள்ள புதிய இடத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிடவுள்ளார். அலங்காநல்லூரில் உள்ளதைப் போல சூரியூரிலும் ஜல்லிக்கட்டு மைதானம் கட்ட அரசு நெல்கொள்முதல் நிலையம் அருகே தேர்வு செய்யப்பட்ட இடத்தையும் அமைச்சர் பார்வையிடுகிறார்.தொடர்ந்து கலையரங்கத்தில் நடைபெறும் விழாவில் பல கோடியிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மறுநாள் 1-ம் தேதி (வியாழக்கிழமை) காலை அந்தநல்லூர் ஒன்றியத்தில் காலை உணவுத் திட்டச் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்கிறார். பின்னர் பச்சமலைக்கு சென்று அரசு பழங்குடியினர் பள்ளியில் பயின்று ஜேஇஇ தேர்வில் வென்று திருச்சி என்ஐடி-யில் பயின்று வரும் மாணவி ரோகிணியின் வீட்டுக்கு சென்று அவரை வாழ்த்துகிறார். அதோடு, பச்சமலையில் மேற்கொள்ளப்படும் பசுமை சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள், சூழியல் சுற்றுலா மலையேற்றம், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தல் என பல்வேறு திட்டங்கள் குறித்து கள ஆய்வு செய்து, புதிய திட்டப் பணிகளையும் தொடங்கி வைக்கிறார். மாலையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறும் அனைத்துத் துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
Comments are closed.