திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு தொந்தரவு செய்யும் வகையில்”ரீல்ஸ்” வெளியிடும் வாலிபர்…! (வீடியோக்கள் இணைப்பு)
நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில், சமூக வலைதளங்களில் “ரீல்ஸ்” வெளியிடும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மோட்டார் சைக்கிளில் சென்று சாகசம் செய்வது, உயரமான இடங்களில் நின்று வீடியோ எடுப்பது, ரயில், பஸ் நிலையங்களில் நின்று நடனம் ஆடுவது, உயரமான இடத்திலிருந்து தண்ணீரில் குதிப்பது என பல்வேறு வகைகளில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். தங்களுக்கு “லைக்ஸ்” வர வேண்டும் என்பதற்காக எந்த இடம் என்பது கூட பார்க்காமல் ரீல்ஸ்களை எடுத்து வெளியிட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்லூரி மாணவிகள் மூவர், மலைக்கோட்டை ரயில் நிலையத்தில் நடனமாடி ரிலீஸ் செய்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நிலையில் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கொள்ளிடம் பாலத்தில் டூ வீலரில் சாகசம் செய்த வாலிபர் மீதும் நடவடிக்கை பாய்ந்தது. இந்நிலையில் திருச்சியின் முக்கிய பகுதியான சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் வாலிபர் ஒருவர் தொடர்ந்து சாகசங்கள் செய்து ரீல்ஸ் வெளியிட்டு வருகிறார். இது, பொதுமக்களையும், கல்லூரி மாணவிகளையும் தொந்தரவு செய்யும் வகையில் அமைந்துள்ளது. சத்திரம் பேருந்து நிலையத்தில் கோட்டை புறக்காவல் நிலையம் அமைந்துள்ளது.
காவல்துறையை மதிக்காமல் அவர் இதுபோன்று பொதுமக்களை தொந்தரவு செய்யும் வகையில் , ரீல்ஸ் வெளியிட்டு வருகிறார். இது, அங்குள்ள காவல் துறையினருக்கு தெரியவில்லையா? அல்லது கண்டும் காணாமல் விட்டு விடுகிறார்களா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இதுபோன்ற இடங்களில் ரீல்ஸ் வெளியிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
Comments are closed.