கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஊழியர்களால் தாக்கப்பட்டவர் உயிரிழப்பு: 11 பேரிடம் போலீசார் விசாரணை…!
கோவை காந்திமாநகர் பகுதியை சேர்ந்தவர் மணி(எ) ராஜா. இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். ராஜா, அவினாசி சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு சென்ற நிலையில் அங்குள்ள கம்பிகளை திருட முயற்சித்தாக கூறப்படுகிறது. இதனைப்பார்த்து அங்கு பணியில் இருந்த மருத்துவமனை பாதுகாவலர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அவரை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால், மயக்கமடைந்த ராஜாவுக்கு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து
பீளமேடு போலீசில் ராஜாவின் உறவினர்கள் புகார் அளித்தனர். அதில், மருத்துவமனை நிர்வாகத்தினர் ராஜாவை கொலை செய்து விட்டதாகவும்,
ஆகவே, மருத்துவமனை மீதும், ராஜாவை தாக்கியவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தனர். இதுகுறித்து ராஜாவின் மனைவி சுகன்யா கூறுகையில், அம்மருத்துமனைக்கு சிகிச்சைக்காக செல்வதாக கூறிவிட்டு சென்ற எனது கணவரை மருத்துவமனையில் இருந்தவர்கள் எதற்காக இந்த வழியில் வந்தாய் என்று கூறி கடுமையாக தாக்கி உள்ளனர். இதன் காரணமாகவே அவர் உயிரிழந்து விட்டார். மேலும், மருத்துவமனை நிர்வாகத்தில் இருந்து 3 பேர் போலீஸ் என பொய் சொல்லி தனது வீட்டிற்கு வந்து விசாரித்து, தன்னை புகைப்படம் எடுத்து சென்றதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து கோவை மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் தலைமையில் மருத்துவமனை பாதுகாவலர்கள், ஊழியர்கள் என 11 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.