திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை குடியிருப்பு பகுதியில் ஒரே இரவில் 8 வீடுகளின் பூட்டை உடைத்து 3 வட மாநில கொள்ளையர்கள் 25 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரத்தை கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தொழிற்சாலை அருகிலேயே குடியிருப்புகள் உள்ளது. 24 மணி நேரமும் செக்யூரிட்டி பாதுகாப்பு உள்ள இந்த குடியிருப்பு பகுதிக்குள் நேற்று இரவு வட மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் டைப் -2 பகுதியைச் சேர்ந்த வர்ணன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த ரூ.30 ஆயிரத்தை கொள்ளையடித்தனர். மேலும், டைப்-3 பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை கொள்ளை அடித்தனர் . தொடர்ந்து டைப் 1- பகுதியில் பூட்டப்பட்டிருந்த 3 வீடுகள், டைப் 3-ல் இருந்த ஒரு வீடு, குடியிருப்பு அருகே உள்ள ஓய்வுபெற்ற ஆசிரியர் லட்சுமணன் மற்றும் ஒரு ஆசிரியரின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். ஆனால், அங்கு பணம், நகை எதுவும் இல்லாததால் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து, தொழிற்சாலையின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நவீன்குமார், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமாருக்கு தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு திருவெறும்பூர் டி.எஸ்.பி. அறிவழகன் மற்றும் நவல்பட்டு இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், அந்த பகுதியில் உள்ள 14 கண்காணிப்பு கேமரவையும் ஆய்வு செய்தபோது சுமார் 18 முதல் 22 வயது மதிக்கத்தக்க 3 வட மாநில வாலிபர்கள் இந்த செயலில் ஈடுபட்டது பதிவாகி இருந்தது.
அதன் அடிப்படையில் நவல்பட்டு போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஒரே நேரத்தில் 8 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் இதேபோன்று கொள்ளைச் சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.