கொள்ளிடம் ஆற்றில் கரை புரண்டோடும் வெள்ளம் – அந்தரத்தில் தொங்கும் மின் கோபுரம், போக்குவரத்து நிறுத்தம்…!
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டு வருகிறது. அந்தவகையில் திருச்சி முக்கொம்பு மேலணைக்கு ஒரு லட்சத்து 6 ஆயிரம் கன அடி நீரானது வந்து கொண்டிருக்கிறது. இதில், காவிரியில் 31 ஆயிரம் கன அடி நீரும், கொள்ளிடத்தில் 68 ஆயிரம் கன அடி நீரும் திறந்து விடப்பட்டு சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் நேப்பியர் பாலம் அருகே மண்ணரிப்பு ஏற்பட்டு பாலம் உடையாமல் இருப்பதற்காக பாலத்தின் அருகே பக்கவாட்டு பகுதியில் 6.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டு இருந்தது. கொள்ளிடம் ஆற்றில் 68 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் தடுப்பணையின் ஒரு பகுதியில் சுமார் 200 மீட்டர் வரை உடைந்துள்ளது. நேப்பியர் பாலத்தில் மணி அரிப்பு ஏற்பட்டதன் காரணமாக அதனை பாதுகாக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் தடுப்பணை கட்டப்பட்டது.
இந்த நிலையில் அந்த தடுப்பணை திடீரென உடைந்தது.
இந்நிலையில் கொள்ளிடம் செக்போஸ்ட் அருகே கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள மின் கோபுரம் சாயும் நிலையில் அந்தரத்தில் தொங்குகிறது.
தண்ணீரும் கரை புரண்டு ஓடுவதால் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு கொள்ளிடம் பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
கொள்ளிடம் பாலத்தின் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. காவலர்கள், தீயணைப்புத் துறையினர், மின்சாரத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Comments are closed.