Rock Fort Times
Online News

பெயர்களை மாற்றி 4 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த “கல்யாண ராணி”கைது…!

வழக்கமாக ஆண்கள் தான் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு மாட்டிக் கொள்வார்கள். ஆனால், இங்கே ஒரு பெண் நான்கு ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு போலீஸிடம் மாட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:- மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திட்டை ஊராட்சி குளங்கரை தெருவை சேர்ந்த ஜீவா மகன் சிவசந்திரன். தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். சிவசந்திரனின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் சிதம்பரம் ராஜா முத்தையா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது நிஷாந்தி என்ற பெண், தான் டாக்டராக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் வேலை பார்த்து வருவதாக சிவசந்திரனிடம் அறிமுகம் செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இருவரும் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து சீர்காழியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் சிவசந்திரன் -நிஷாந்திக்கு அண்மையில் முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டிருந்தது. இதைப்பார்த்த சீர்காழி அருகே புத்தூர் வாய்க்காங்கரை தெருவை சேர்ந்த தங்கராசு மகன் நெப்போலியன் (34) என்பவர் சீர்காழி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், கடந்த 2017-ம் ஆண்டு மீரா என்ற பெயரில் இந்த பெண் தன்னிடம் அறிமுகமானதால் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு சென்னையில் வசித்து வந்தபோது மீரா என்னை விட்டு சென்று விட்டார். அதன்பிறகு அவரை நான் தொடர்பு கொள்ள முடியவில்லை.
தற்போது அவர் வேறு ஒரு ஆணை திருமணம் செய்து கொண்டதை சமூக வலைதளங்களில் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ஆகவே, தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிய அந்தப் பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். புகாரின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பலதா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து லட்சுமி என்கின்ற நிஷாந்தியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. விசாரணையில், கொடியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த லட்சுமி என்கிற அந்தப் பெண்ணுக்கும், பழையாறு கிராமத்தை சேர்ந்த சிலம்பரசனுக்கும் முறைப்படி கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு தர்ஷன் என்கின்ற மகனும், ரேணுகா என்கின்ற மகளும் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்து விட்டதால் பெண் குழந்தையை இறந்து போன கணவரின் அண்ணன் ஜெயக்குமார் பராமரிப்பில் விட்டுவிட்டு, ஆண் குழந்தையுடன் கொடியம்பாளையத்தில் உள்ள அம்மா வீட்டில் தங்கி வசித்து வந்துள்ளார். பின்னர் தனது பெயரை மாற்றிக் கொண்டு 2017-ம் ஆண்டு புத்தூர் கிராமத்தை சேர்ந்த நெப்போலியனை திருமணம் செய்துவிட்டு 2021-ம் ஆண்டு தலைமறைவாகி விட்டார். இதையடுத்து கடலூர் மாவட்டம் சிதம்பரம் கோல்டன் நகரை சேர்ந்த நடராஜன் மகன் ராஜாவிடம் தான் டாக்டர் என கூறி குடும்ப நடத்தி அங்கிருந்தும் தலைமறைவாகி உள்ளார். இதேபோல் ஈரோடு மாவட்டத்திலும் ஒருவரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் நிஷாந்தி என்ற பெயரில் தன்னை ஏமாற்றிய பெண் குறித்து சிவசந்திரனும் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து அனைத்து மகளிர் போலீசார் பல ஆண்களை பல பெயர்களில் ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட லட்சுமியை கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய இளம்பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்