Rock Fort Times
Online News

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய பலி 35 ஆக உயர்வு- கலெக்டர், எஸ்பி, போலீசார் கூண்டோடு மாற்றம்…!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு அடுத்த கர்ணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்ததாக 74 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், அதே பகுதியை சேர்ந்த பிரவீன் (29), த.சுரேஷ் (46), ம.சுரேஷ் (45), சேகர் (61) ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். கள்ளச்சாராயம் குடித்த பலரும் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். பின்னர், அங்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிலர் புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்  பட்டனர். அவர்களில் மணி (58), கிருஷ்ணமூர்த்தி (62), இந்திரா (38) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.  சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 7 பேரில் நாராயணசாமி (65), ராமு (50), சுப்பிரமணி (60) ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் (55), ஆறுமுகம் (75), தனகோடி (55), டேவிட் (28) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். நேற்றிரவு 10 மணி நிலவரப்படி 2 பெண்கள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். இந்தநிலையில் இன்று ( 20-06-2024) காலை நிலவரப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கள்ளக்குறிச்சியில் முகாமிட்டு நிவாரண பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமாரை பணியிட மாற்றம் செய்து புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்தை தமிழக அரசு நியமித்துள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனாவை பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டதோடு, புதிய எஸ்.பி.யாக ரஜத் சதுர்வேதியை நியமித்துள்ளது. கள்ளச்சாராய விவகாரத்தை தொடர்ந்து, மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு டிஎஸ்பி தமிழ்செல்வன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் பாண்டிச்செல்வி, திருக்கோவிலூர் உதவி காவல் ஆய்வாளர் பாரதி மற்றும் அப்பகுதி காவல் நிலைய ஆய்வாளர்கள் ஆனந்தன், சிவசந்திரன், காவல் நிலைய எழுத்தரும், சிறப்பு காவல் உதவி ஆய்வாளருமான பாஸ்கரன், திருக்கோவிலூர் டிஎஸ்பி மனோஜ்குமார் ஆகியோரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்