திருச்சி, திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த ராதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் அங்குள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2012ம் ஆண்டு புதுக்கோட்டையை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ராதாவின் கணவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு பூலாங்குடி காலனியை சேர்ந்த மாரிமுத்து என்பவரை ராதா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்தநிலையில் ராதாவின் முதல் கணவருக்கு பிறந்த 13 வயது சிறுமிக்கு, மாரிமுத்து தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும்,அந்த சிறுமியை ஆபாசமாக புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு அதனை சமூக வலைதளங்களில் பரவ விடுவதாக மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தற்போது அந்த சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நாளுக்கு நாள் பாலியல் தொல்லை அதிகரிக்கவே, இது குறித்து தனது தாயிடம் அந்த சிறுமி கூறி கதறி அழுதுள்ளார். பள்ளிக்கூடத்துக்கும் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ராதா, இதுகுறித்து திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராதா புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் மாரிமுத்து மீது போக்சோ மற்றும் கொலை மிரட்டல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.தந்தை ஸ்தானத்தில் இருக்க வேண்டிய ஒருவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed.