Rock Fort Times
Online News

தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகருக்கு அவமரியாதையா..?* முதல்வர் விஜய் நடவடிக்கை எடுப்பாரா..?

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழகம் வி.சி.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது. முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்று உள்ளார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவி ஏற்று கொண்டனர். அவர்களுக்கு இலாகாவும் ஒதுக்கப்பட்டு பணிகளை தொடர்ந்து வருகின்றனர். சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகர் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை சபாநாயகராக திருச்சி மாவட்டம், துறையூர் (தனி) தொகுதியில் த.வெ.க.சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரவிசங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நாள் முதல் ஜாதி, சமய, இன வேறுபாடு இன்றி அனைத்து தரப்பினரையும் அரவணைத்து ஆட்சி நடத்தி வருகிறார். அந்தவகையில்தான், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ரவிசங்கருக்கு துணை சபாநாயகர் பதவி வழங்கி அழகு பார்த்தார்.

சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவி என்பது அமைச்சருக்கு இணையான பொறுப்பாகும். ப்ரொட்டாகால் விதிகளின்படி, அவர்களுக்கு தேசியக்கொடி கட்டப்பட்ட கார் வழங்கப்படும். துணை சபாநாயகராக பொறுப்பேற்று சொந்த மாவட்டத்திற்கு வருகை தரும் போது அவரை அந்த மாவட்டத்தின் கலெக்டர் உள்ளிட்ட உயரதிகாரிகள் மரியாதை நிமித்தமாக சந்திப்பது வழக்கம். அப்போது மாவட்டத்தில் உள்ள மற்ற அதிகாரிகளை துணை சபாநாயகருக்கு அறிமுகப்படுத்த வேண்டும். இது ப்ரொட்டாகால் விதிமுறைப்படி காலம் காலமாக நடந்து வரும் மரபு ஆகும். ஆனால், துணை சபாநாயகராக பொறுப்பேற்றுள்ள ரவிசங்கரை இதுவரை மரியாதை நிமித்தமாக திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் ஏனைய அதிகாரிகள் யாரும் சந்திக்கவில்லை. தமிழ்நாடு அரசு சுற்றுலா மாளிகையில் ஒப்புக்குகூட துணைசபாநாயகருக்கான மரியாதை நிமித்தமான சந்திப்பு நிகழவில்லை. ரெவின்யூ’ மீட்டிங்கும்கூட தற்போது வரை நடைபெறவில்லை. அதற்கான முகாந்திரமும் தென்படவில்லை. இது ப்ரொட்டோகால் விதிமுறைகளை மீறிய செயலாகும். ஏன் இந்த பாகுபாடு என்றுதான் தெரியவில்லை. இதனை தமிழக காவல் உளவு பிரிவு அதிகாரிகள் முதல்வர் விஜயின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். துணை சபாநாயகரை அவமரியாதை செய்யும் வகையில் நடந்து கொள்ளும் அதிகாரிகள் மீது முதல்வர் விஜய் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அரசியல் பார்வையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்