போலீஸ் ஐ.ஜி வரை சென்ற திருச்சி, காட்டூர் பஸ் ஸ்டாண்ட் பஞ்சாயத்து… அரசியல் சதிராட்டத்தால் ஒதுங்க இடமின்றி நிற்கதியாய் தவிக்கும் பொதுமக்கள்..!
திருச்சி மாநகராட்சி 43வது வார்டுக்குட்பட்ட, தஞ்சாவூர் டூ திருச்சி சாலையிலுள்ள காட்டூரில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் பஸ் ஸ்டாப் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அப்பகுதியிலிருந்து பள்ளி, கல்லூரி மற்றும் வேலைகளுக்காக திருச்சி மாநகர பகுதிகளுக்கு செல்பவர்கள் இப்பேருந்து நிறுத்தத்தையே பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ( அக்டோபர் 24 ) நள்ளிரவு திடீரென அப்பேருந்து நிறுத்தம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டதாக தெரிகிறது. பேருந்து நிறுத்தத்திற்கு பின்புறம், கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றின் ஷாப்பிங் சென்டர் வருவதால், அதற்கு இடையூறாக இருந்த பஸ் ஸ்டாப்பை, 43வது வார்டு திமுக கவுன்சிலர் செந்தில் பணம் பெற்றுக்கொண்டு இடித்துத் தள்ளிவிட்டார் எனக்கூறி அப்பகுதி த.வெ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு திருவெறும்பூர் காவல் நிலையத்தில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று காலை பஸ் ஸ்டாப் இடிப்பு விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட திமுக கவுன்சிலர் செந்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது. “பேருந்து நிறுத்தம் இடிக்கப்பட்டதற்கும், எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. தனது கமர்ஷியல் பில்டிங்கிற்கு இடையூறாக இருக்கும் பஸ் ஸ்டாண்டை வேறு இடத்திற்கு மாற்றுமாறு இக்கட்டிடத்தின் உரிமையாளர் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினரிடம் வலியுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையிலேயே, காட்டூர் பஸ் ஸ்டாப் இடிக்கப்பட்டுள்ளது. அதை வேறு இடத்தில் மாற்றுவதற்கான பணிகளிலும் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. இந்நிலையில், நான் லஞ்சம் பெற்றுக்கொண்டு காட்டூர் பேருந்து நிறுத்தத்தை இடித்து விட்டதாக சொல்கின்றனர். இது முற்றிலும் தவறு. ஆகவே இவ்விவகாரத்தில் திமுகவையும், என்னையும் தொடர்புப்படுத்தி பொய்யான தகவலை பரப்பி வரும் காட்டூர் பகுதி த.வெ.க வினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜியிடம் புகார் அளித்துள்ளேன்” என்றார்.
இவ்விவகாரம் அப்பகுதி அரசியல் வட்டாரத்தில் தற்போது பரபரப்பை பற்ற வைத்துள்ளது. இது ஒருபுறமிருக்க, இன்று செய்தியாளர்களை சந்தித்தபின் திமுக கவுன்சிலர் செந்தில் சொல்வது உண்மையென்றால், யாருக்கும், முன்பின் தகவல் தெரிவிக்காமல் நள்ளிரவு நேரத்தில் பஸ் ஸ்டாப்பை இடிக்க வேண்டிய அவசியம் தேசிய நெடுஞ்சாலைத்துறையினைருக்கு ஏன் வந்தது? அப்புறப்படுத்தப்பட்ட பேருந்து நிறுத்தத்தின் பயணிகள் அமரும் இருக்கைகள், ஸ்டீல் ரூஃப், போன்ற பொருட்கள் ஏன் அருகிலுள்ள பில்டிங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது?. கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக ஒரே நாளில் வேகமாக செயல்படும் நெடுஞ்சாலைத்துறையினர் ஏன் பொதுமக்கள் வைக்கும் கோரிக்கைகள் மீது கவனம் செலுத்துவதில்லை? என்பது போன்ற கேள்விக்கணைகளை அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் தொடுத்து வருகின்றனர். நிழற்குடை திடீரென இடிக்கப்பட்டதால் பொதுமக்களும், மாணவர்களும் கொட்டும் மழையில் நின்று பஸ் பிடித்து செல்கின்றனர்.

Comments are closed.