Rock Fort Times
Online News

விலைவாசியை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை… திருச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருச்சியில் நடைபெற்ற ஒரு கல்லூரி விழாவில் பங்கேற்றார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“இந்திய ரூபாயின் மதிப்பு, டாலருக்கு நிகராக எப்போது சமநிலை அடையும் என்பது அரசு நிர்ணயம் செய்யும் விஷயம் அல்ல. அது தன் சமநிலையை இயற்கையாகவே அடையும். அதாவது இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு என்பது இந்திய ரூபாயின் மதிப்பு ஒரே அடியாக குறையவோ, அதிகரிக்கவும் விடாமல் பார்த்துக் கொள்வது. அதேவேளையில் ரிசர்வ் வங்கியும் இந்திய ரூபாயின் மதிப்பு இந்த நிலையில்தான் இருக்க வேண்டும் என்ற வரம்பை நிர்ணயிப்பது கிடையாது. சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தத்தில் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டு இருப்பதாக நாடு முழுவதும் எழுந்த புகாரை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தை நாடி நியாயம் கேட்கலாம். அது ஒரு வழிமுறை. அல்லது போராட்டம் வாயிலாக நியாயம் கேட்கலாம். இது இரண்டாவது வழிமுறை. எதிர்க்கட்சிகள் அரசியல் ரீதியாக இரண்டாவது வழிமுறையை தற்போது கையாண்டு வருகின்றனர். நாட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த 2014-ம் ஆண்டு முதல் அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தக் குழு வாயிலாக ஒவ்வொரு ஆண்டும் வேளாண் சார்ந்த பொருட்கள் சந்தைப்படுத்துவதில் ஏற்படும் தட்டுப்பாடுகளை தவிர்க்க விநியோக மேலாண்மையை அந்த குழு கையாண்டு வருகிறது. தற்போது வரை அந்த குழு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன் வாயிலாகவே ஏற்றுமதியில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய குறைந்தபட்ச உதவி தொகை போன்றவை சரியாக வழங்கப்பட்டு வருகிறது. நாட்டின் கடன் சுமையை குறைக்க கொரோனா தேசிய பேரிடருக்கு முந்தைய காலகட்டத்திலும், அதற்கு பிந்தைய காலகட்டத்திலும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது இதற்கு நான் பிரதமருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். தற்போதும் மேற்காசிய நாடுகள் போர் காரணமாக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை எதிரொலியாக, நமது நாட்டில் ஏற்பட்ட பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வு, மக்களை பாதிக்காத வண்ணம் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பின்னர் அவர் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்