இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங், இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டிய நாட்டின் முன்னணி மல்யுத்த நட்சத்திரங்கள் அவரை கைது செய்ய கோரி மாதக்கணக்கில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர் மல்யுத்த நிர்வாகத்தில் இருந்து ஒதுங்கினார். இதற்கிடையே, இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் பிரிஜ் பூஷனின் ஆதரவாளர்களை போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று சாக்ஷி மாலிக், பஜ்ரங் பூனியா ஆகியோர் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குரை சந்தித்து வலியுறுத்தினர் என்றாலும் பிரிஜ் பூஷனின் விசுவாசியான சஞ்சய் சிங் புதிய தலைவராக நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனால் போராட்டத்தை முன்னின்றி நடத்தியவர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்றவரான சாக்ஷி மாலிக் மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்தார். இந்தநிலையில், பிரிஜ் பூஷன் சரண் சிங் ஆதரவாளர் சஞ்சய் சிங் இந்திய மல்யுத்த சங்க தலைவரானதற்கு எதிர்ப்பு தெரிவித்து பத்மஸ்ரீ விருதை பிரதமரிடம் திருப்பி ஒப்படைப்பதாக இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா அறிவித்துள்ளார். பாலியல் புகாரில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்காததால் விருதை பஜ்ரங் பூனியா திரும்ப அளிப்பதாக தமது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். பஜ்ரங் பூனியா, ஒலிம்பிக் போட்டியில் ஒரு வெண்கலம், உலக சாம்பியன்ஷிப்பில் ஒரு வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
1
of 842
Comments are closed, but trackbacks and pingbacks are open.