தமிழகத்தில், புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திணிக்க பார்க்கிறது: திருச்சியில் கனிமொழி எம்பி பேச்சு…!
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திராவிடப்பள்ளி 5ம் ஆண்டு தொடக்கவிழா நடைபெற்றது. விழாவிற்கு, திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமை வகித்தார். திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் விளக்க உரையாற்றினார் இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத்தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி. கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், மதவாத, சாதியவாத அரசியலை, பிரிவினைவாத அரசியலை சிலர் மேற்கொண்டு வருகின்றனர். பெண்கள் பல்வேறு தியாகங்களைச் செய்ததால் தான் நாம் உயர்ந்துள்ளோம். மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை தமிழகத்தின் மீது திணிக்க முயற்சிக்கிறது. ஆனால், கல்வியில் தமிழகம் 30 ஆண்டுகள் முன்னோக்கியுள்ளது. ஒரே ஒரு மாணவன் இருந்தாலும் அந்த பள்ளியை நடத்தும் மாநிலம் தமிழ்நாடு. குக்கிராமத்தில் இருப்பவர்களுக்கு கூட கல்வி சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு செயல் படகாரணம் திராவிடம். எந்த ஒரு காரணத்திற்காகவும் கல்வி கற்காமல் யாரும் இருந்து விட கூடாது என செயல்பட்ட இயக்கம் திராவிட இயக்கம். சாதி சான்றிதழ் கேட்பது, சாதியை தெரிந்து கொள்வதற்காக அல்ல, அவர்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியை, உரிமையை வழங்குவதற்குத்தான்.
பெண்களுக்கு எதிரான வன்முறை நடக்கும்போது, மத்தியில் ஆளும் பாஜக, பெண்கள் மீது தான் குற்றச்சாட்டை முன் வைப்பார்கள். எந்தவித அடிப்படை வாதத்தாலும் முதலில் பாதிக்கப்படுவது பெண்கள் தான். உடைகள் பெண்களுக்கு தடையாக இருக்க கூடாது, எனவேதான் உன்னுடைய உடையை நீயே தீர்மானி என்றார் பெரியார். பெண்கள் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல. கனவுகள், லட்சியங்கள் எதற்கும் எதுவும் தடையாக இருக்க கூடாது. திராவிடம் என்பது மிகப்பெரிய ஆற்றலாக மாறி பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. அம்பானி, அதானிக்கு தான் எல்லாமும் கிடைக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது. ஆனால் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும், எல்லாமும் சமம் என்பது திராவிடம். திராவிடம் என்பது மனித நேயம். இது தான் நம்முடைய சிந்தனை. நாம் போராடி பெற்ற உரிமைகள் உங்களிடம் இருக்கிறது. திராவிட இயக்கத்தின் கொள்கைகளை தாங்கி இருக்க வேண்டும் என்றார். விழாவில், மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், எம்.எல்.ஏக்கள் காடுவெட்டி தியாகராஜன், ஸ்டாலின்குமார், தலைமை கொறடா கோவி.செழியன், மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.