லாட்டரியில் விழுந்த ரூ.10 லட்சம் பரிசு தொகையை கொடுக்காமல் ஏமாற்றியவருக்கு “காப்பு”: மற்றொருவருக்கு வலை…!
திருச்சி உறையூர் டாக்கர் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரெங்கராஜ் (வயது 52). இவர், திருச்சி சோமரசம் பேட்டையை சேர்ந்த தனசேகரன் மற்றும் திருச்சி தாராநல்லூரை சேர்ந்த சீனிவாச கோபாலன் (44) ஆகியோரிடம் லாட்டரி சீட்டு வாங்கி இருந்தார். அந்த லாட்டரி சீட்டுக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை விழுந்துள்ளது. இதனால், மகிழ்ச்சி அடைந்த ரெங்கராஜ், தனசேகரன் மற்றும் சீனிவாச கோபாலனை சந்தித்து பரிசுக்குரிய பணத்தை கேட்டார். அதற்கு இருவரும் முதலில் மறுப்பு தெரிவித்தனர். பின்னர், ரூ.3.50 லட்சம் மட்டும் தருவதாக பேசியுள்ளனர். ஆனால், அந்தப் பணத்தையும் அவர்கள் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கேட்டபோது, அவர்கள் இருவரும் ரெங்கராஜை கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். இதுகுறித்து உறையூர் போலீசில் ரெங்கராஜ் புகார் கொடுக்கவே, போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாச கோபாலனை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன் மற்றும் கத்தி, ரூ.3.50 லட்சம் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர் . மேலும், தனசேகரனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இவர்கள் லாட்டரி எப்படி விற்றார்கள்? இவர்களுக்கு பின்னால் வேறு யாரேனும் இருக்கிறார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.