திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் 19-வது பட்டமளிப்பு விழா இன்று ( 28.07.2023 ) நடந்தது. விழாவை என்.ஐ.டி.நிர்வாக குழுத் தலைவர் பாஸ்கர்பட் தொடங்கி வைத்தார். விழாவில் 2,155 மாணவர்கள் பட்டம் பெற்றனர். காலை, மாலை என 2 அமர்வுகளாக விழா நடத்தப்பட்டது. முற்பகல் அமர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும், இளங்கலை மாணவர்களுக்கு பட்டங்களும் வழங்கப்பட்டன. பிற்பகல் அமர்வில் முதுகலை மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. முதன்மை மதிப்பெண்கள் பெற்ற மாணவருக்கு வழங்கப்படும் ஜனாதிபதியின் சிறப்புப் பதக்கத்தை மின் பொறியியல் மற்றும் மின்னணுவியல் துறையின் மாணவி சௌந்தர்யா பெற்றார். விழாவில், பயிலக இயக்குனர் ஜி.அகிலா, தேசிய தொழில்நுட்பக் கழகம் கல்வியிலும், ஆராய்ச்சியிலும் புரிந்த சாதனைகளை பட்டியலிட்டார். நிர்வாகக் குழுத் தலைவர் பாஸ்கர்பட் பட்டம் பெற்ற மாணவர்களை பாராட்டிப் பேசினார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் சௌமித்ர பட்டாச்சாரியா பேசுகையில், புதிய விஷயங்களைக் கற்பதற்கும், காலத்தே வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் இளம் வல்லுனர்கள் உற்சாகத்துடன் செயல்புரிய வேண்டும். மகத்தான இப்பணியில், அவர்கள் தங்களது தவறுகளைத் திருத்திக் கொண்டு நல்லெண்ணத்தை ஆரத் தழுவும் ஒரு கலாச்சாரத்தை கடைப்பிடிக்க வேண்டும். அதாவது, தீயன நீக்கி, வேண்டுவனவற்றை ஏற்று அவர்கள் நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.