சிறுமியை விபச்சாரத்தில் தள்ளிய தாய், வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது…
திருச்சி போலீஸ் கமிஷனர் அதிரடி!
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் எம். சத்தியபிரியா ஐ.பி.எஸ் திருச்சி மாநகரத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர்களை கண்காணிக்கவும், கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு துணை கமிஷனர்கள், சரக உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் ஆகியோருக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார். அதன்படி, கடந்த (25.01.23)-ந்தேதி கண்டோன்மெண்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தும், கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாகவும் வந்த தகவலின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பாக்கியராஜ் மகனும் தொலைக்காட்சி ஒன்றில் நிருபராக பணியாற்றிய பிரபின் கிறிஸ்டல்ராஜ் வயது 40 மற்றும் திருச்சி சுப்ரமணியபுரத்தை சேர்ந்த சிறுமியின் தாய் ரமிஜா பானு வயது 50 ஆகியோர் மீது கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் பிரபின் கிறிஸ்டல்ராஜ், ரமீஜா பானுவுடன் சேர்ந்துக்கொண்டு பல பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி அவர்களது வாழ்க்கையை சீரழித்ததும் பாதிக்கப்பட்ட சிறுமியை பல நபர்களுக்கு ஏமாற்றியும், கட்டாயப்படுத்தியும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதும், அச்சிறுமியை பிரபின் கிறிஸ்டல்ராஜ் அச்சுறுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது. மேலும் அவர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் என விசாரணையில் தெரிய வருவதாலும், கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடுத்த அறிக்கையின் அடிப்படையிலும், மாநகர போலீஸ் கமிஷனர் எம். சத்தியபிரியா ஐபிஎஸ் , 2 பேர் மீதும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் , அடைக்கப்பட்டுள்ள மேற்கண்ட 2 பேரிடமும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகல் வழங்கப்பட்டது. திருச்சி மாநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.