Rock Fort Times
Online News

திருச்சி மத்திய சிறையில் கஞ்சா சிக்கிய விவகாரம்: 4 கைதிகள் மீது வழக்கு பதிவு…!

திருச்சி மத்திய சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். கடந்த 13 ந் தேதி, சிறை வளாகத்தின் பார்வையாளர்கள் மனு அளிக்கும் இடம் அருகே உள்ள கழிவறை குழாயில் நீல நிறத்தில் 3 பொட்டலம் சுற்றி கிடந்தது. தோட்ட வேலை செய்ய வந்தபோது பாலு, துரைராஜ் ஆகிய 2 கைதிகள் இதனை பார்த்து பாக்கெட்டில் எடுத்து வைத்துக் கொண்டனர். இதனைப் பார்த்த சிறை அதிகாரி சண்முகசுந்தரம் அவர்கள் இருவரையும் அழைத்து சட்டையில் என்ன மறைத்து வைத்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு பாலு முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து பாலுவை முழுவதுமாக சோதனை செய்த போது கஞ்சா பொட்டலம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. கஞ்சா எப்படி வந்தது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தியதில், பாலு, துரைராஜ், சதீஷ், ஆனந்த் ஆகிய 4 கைதிகளில் ஆனந்த் மட்டும் கடந்த வாரம் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே சென்றுள்ளார். அவரிடம் 3 பேரும் கஞ்சா வாங்கி வருமாறு கேட்டுள்ளனர். ஜாமீனில் வெளியே சென்ற ஆனந்த், கஞ்சாவை வாங்கி அதை 3 பொட்டலங்களாக பிரித்து எடுத்துக் கொண்டு சிறை வளாகத்திற்கு வந்து மேற்கண்ட 3 கைதிகளை பார்க்க மனு கொடுத்துள்ளார். ஆனால், போலீசார் அவர்களை பார்க்க அனுமதிக்கவில்லை. ஆகவே, ஆனந்த் சிறை வளாகத்தில் உள்ள கழிவறை அருகே 3 கஞ்சா பொட்டலங்களையும் வைத்துவிட்டு சென்றுவிட்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து சிறைத்துறை அதிகாரி சண்முகசுந்தரம் கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிந்து, அவர்களிடம் இருந்து 55 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்