Rock Fort Times
Online News

காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மௌலானா 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை… * தேர்தல் ஆணையம் நடவடிக்கை..!

கடந்த 2021-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அசன் மௌலானா. தனது தேர்தல் செலவாக ரூ.17,03,548 செலவிட்டதாக தேர்தல் ஆணையத்திடம் கணக்கு தாக்கல் செய்திருந்தார். ஆனால், தேர்தல் காலமான 2021 மார்ச் 27, 28 மற்றும் ஏப்ரல் 3 ஆகிய தேதிகளில் 10 முன்னணி நாளிதழ்களில் அவரை ஆதரித்து விளம்பரங்கள் வெளியிடப்பட்டது தேர்தல் ஆணையத்தின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த விளம்பரங்களுக்கான செலவு ரூ.32,05,915 என மதிப்பிடப்பட்டது. இந்தத் தொகையையும் அசன் மௌலானா கணக்கில் காட்டிய ரூ.17,03,548-யையும் சேர்த்தால், அவரது மொத்த தேர்தல் செலவு ரூ.49,09,463 ஆகும். 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது ஒரு வேட்பாளருக்கான தேர்தல் செலவு உச்சவரம்பு ரூ.30.80 லட்சமாக இருந்த நிலையில், அசன் மௌலானாவின் தேர்தல் செலவு அந்த வரம்பை மீறியதாக கண்டறியப்பட்ட நிலையில், இது தொடர்பாக அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, தேர்தல் செலவுக் கணக்கை முறையாக தாக்கல் செய்யத் தவறியது கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் பிரிவு 10A-ன் கீழ் அசன் மௌலானாவைத் தேர்தலில் போட்டியிட மூன்று ஆண்டுகளுக்கு தடை விதித்து இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்