திருச்சி உறையூர் வடிவேல் நகரில் உள்ள ஒரு வீட்டில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டதாக உறையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், இரண்டு பேரும் இறந்து கிடந்த வீடு உறையூர் வடிவேல் நகரை சேர்ந்த நந்தகுமார்( வயது 32) என்பவரின் வீடு என்பதும், இவர் கேஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் ஊழியர் என்பதும் தெரிய வந்தது. இவருக்கும், திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி மனைவி ஜெயசித்ரா ( 47) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இவர்களுடைய கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு வரவே இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தற்கொலை செய்து கொண்ட ஜெயசித்ராவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நந்தகுமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கள்ளக்காதல் ஜோடி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.