முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான
அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று(03-07-2026) கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நேற்று இரவு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். வெளியே வந்த அவர், தன்னை தமிழக வெற்றி கழகத்தில் இணையுமாறு வற்புறுத்திதாக குற்றம் சாட்டினார். இதற்கு த.வெ.க. அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார். சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த அமைச்சர் செங்கோட்டையன், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவரிடம், தன்னை த.வெ.க-வில் இணைய அக்கட்சியினர் வற்புறுத்தியதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “அனிதா ராதாகிருஷ்ணன் ஏதோ பேச வேண்டும் என்பதற்காகப் பேசியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தில் இணையச் சொல்லி யார் அவரிடம் பேசினார்கள்? யார் வற்புறுத்தினார்கள்? என்பதை அவர் தெளிவாகச் சொன்னால் நன்றாக இருக்கும்” என்றார். அ.தி.மு.க விவகாரம் குறித்து கேட்டதற்கு, “கடந்த தேர்தலின் போது எடப்பாடி பழனிசாமி அனைத்தையும் கவனிக்க மறந்து விட்டார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் இந்த இயக்கத்தை மக்களுக்கான இயக்கமாக நடத்திய நிலையில், எடப்பாடி பழனிசாமியோ அதனை ஒரு கார்ப்பரேட் கம்பெனி போல நடத்தி வருகிறார். இதனாலேயே அக்கட்சியிலிருந்து நிர்வாகிகள் ஒருவர்பின் ஒருவராக ராஜினாமா செய்துவிட்டு வெளியேறி வருகிறார்கள்” என்றார். அப்படி அ.தி.மு.க-விலிருந்து வெளியேறுகிறவர்கள், த.வெ.க-வில் இணைகிறார்களே என்று கேட்டதற்கு, “நம்மை நம்பி வருபவர்களுக்கு எப்படி நம்பிக்கை ஊட்டுவது என்பது குறித்த இறுதி முடிவை த.வெ.க தலைவர் விஜய் தான் மேற்கொள்வார்” என்றார். முதலமைச்சர் கரூர் செல்வது குறித்த கேள்விக்கு, “தொடர் அலுவல் பணிகள், சட்டமன்ற கூட்டத்தொடர் மற்றும் துறை வாரியான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் கரூர் செல்லமுடியாத நிலை இருந்தது. முதலமைச்சர் எதற்காக அங்கு செல்கிறார்? அங்குள்ள மக்களுக்கு என்ன நன்மை செய்யப்போகிறார்? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்று பதிலளித்தார்.

Comments are closed.