திண்டுக்கல் தாடிக்கொம்பு கள்ளிப்பட்டி ஆதிசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (40). டூ வீலர் வாட்டர் சர்வீஸ் சென்டர் வைத்து நடத்தி வருகிறார்.
இவரது மனைவி மேனகா (36). இவர்களுக்கு ஹிந்து பாகினி(16), தான்யஸ்ரீ (12) என இரு மகள்கள். மேனகாவுக்கும், அவரது உறவினர் ஒருவருக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சீனிவாசன், மனைவியை கண்டித்தார். மேலும், இதுதொடர்பாக அவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த பிரச்சனை தாடிக்கொம்பு காவல் நிலையம் வரை சென்றது.

போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகும் அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால், வாழ்க்கையில் வெறுப்படைந்த மேனகா, தனது இரு மகள்களுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த தாடிக்கொம்பு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக சீனிவாசனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.