திருச்சி மாவட்டம், தாளக்குடியை சேர்ந்தவர் ரத்தின குமார். இவருடைய மனைவி தேவி. ரத்தினகுமாரின் மாமனார் ரவிச்சந்திரன் கடந்த 2002 ம் ஆண்டு காலமானார். அவரது பெயரில் உள்ள சொத்துக்களை விற்பதற்காக தேவிக்கு வாரிசு சான்றிதழ் கேட்டு ரத்தினகுமார் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 22-ம் தேதி விண்ணப்பித்திருந்தார். ரவிச்சந்திரன், திருச்சி மாநகராட்சி கோ.அபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட பீமநகர் பகுதியில் வசித்ததால் அது தொடர்பான விண்ணப்பம் கோ.அபிஷேகபுரம் கோட்ட கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமாரிடம் இருந்துள்ளது. அந்த விண்ணப்பம் குறித்து விசாரிப்பதற்காக ரத்தினகுமார், கோ.அபிஷேகபுரம் கோட்ட அலுவலகம் சென்று விஏஓ செந்தில்குமாரை சந்தித்து கேட்டார். அப்போது செந்தில்குமார் வாரிசு சான்றிதழ் வழங்க தனக்கும் உயரதிகாரிகளுக்கும் சேர்த்து ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர் படிப்படியாக குறைத்துக் கொண்டு இறுதியாக ரூ.3 ஆயிரம் கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும்பாத ரத்தினகுமார் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் ஆலோசனைப்படி இன்று (29-08-2024) கோ.அபிஷேகபுரம் கோட்ட அலுவலகம் சென்ற ரத்தினகுமார் ரூ.3 ஆயிரம் லஞ்சப்பணத்தை செந்தில்குமாரிடம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார் செந்தில்குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அங்கு விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்சம் வாங்கியதாக விஏஓ கைது செய்யப்பட்ட விவகாரம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.