Rock Fort Times
Online News

அடகு வைக்கப்பட்ட தங்க நகைகள் போலி நகையாக மாறியது எப்படி?- திருச்சி  வங்கி முற்றுகை…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள மேலசீதேவி மங்கலத்தைச் சேர்ந்தவர் மணிமேகலை. இவர் மண்ணச்சநல்லூர் கடைவீதியில் உள்ள வங்கி ஒன்றில் கணக்கு வைத்துள்ளார். குளித்தலை பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், மணிமேகலை 13 பவுன் நகைகளை வங்கியில் அடமானம் வைத்து ரூ.3.88 லட்சம் பெற்றுள்ளார். அடகு வைத்த நகைகளை திருப்பாமல் ஒவ்வொரு வருடமும் வட்டி கட்டி புதுப்பித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், வங்கி வாடிக்கையாளர்கள் சிலருடன் ஈஸ்வரன் கூட்டு சேர்ந்து கொண்டு போலி நகைகளை அடமானமாக பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக வங்கி மேலாளர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு ஈஸ்வரன் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து வங்கியில் நேற்று தணிக்கை (ஆடிட்டிங் ) நடைபெற்றது. அப்போது நகையை புதுப்பிக்கவும், மேற்கொண்டு பணம் பெறவும் மணிமேகலை வங்கிக்கு சென்றார். அப்போது அவரது நகைகளை பரிசோதனை செய்து பார்த்தபோது அதில் 9 பவுன் நகைகள் போலி நகை எனவும், பணத்தைக் கட்டி நகைகளை திருப்பிக் கொள்ளுங்கள் என வங்கி அலுவலர்கள் கூறி வங்கியில் மணிமேகலையை 3 மணி நேரம் காக்க வைத்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து தகவல் அறிந்த மணிமேகலை உறவினர்கள் வங்கிக்கு விரைந்து வந்து எங்கள் தரப்பில் எந்த தவறும் நடக்கவில்லை, வங்கி தரப்பில் தான் ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று கூறி வங்கியை முற்றுகையிட்டு அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பின்னர் வங்கிக்கு வெளியே வந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர். தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிமேகலை உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து
விசாரணை நடத்தப்படும் என்று கூறியதை அடுத்து சாலை மறியலை கைவிட்டனர்.
பின்னர் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் மணிமேகலை புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மணிமேகலை தரப்பில் கூறுகையில், ஒருவர் வங்கியில் நகைகளை அடமானம் வைத்து பணம் பெறும்போது அந்த நகைகள் தங்க நகைகளா என்று சரி பார்ப்பது வழக்கம். அப்படி சரி பார்த்து தான் பணம் வழங்கப்பட்டது. தற்போது போலி நகைகள் என்று வங்கி தரப்பில் கூறப்படுகிறது . ஒரிஜினல் நகைகளை எடுத்து விட்டு போலி நகைகளை வைத்துள்ளனர் என்று நாங்கள் சந்தேகப்படுகிறோம். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம் என்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் வாடிக்கையாளர் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்