Rock Fort Times
Online News

கீழக்குறிச்சி ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு: திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து கிராம மக்கள் தர்ணா…!

திருச்சி மாவட்டம், கீழக்குறிச்சி ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிர்வாக வசதிக்காக பெரும்பாலான ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இணைத்தால் கிராமப்புற வாழ்வாதாரம் பாதிக்கப்படும், பல்வேறு வரிகள் விதிக்கப்படலாம், 100 நாள் வேலை கிடைக்காமல் போய்விடும் என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே அதவத்தூர், கீழவயலூர், குண்டூர் போன்ற ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல, திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழக்குறிச்சி ஊராட்சியை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று(13-01-2025) கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அங்கிருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாரிடம்,திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்காக ஊராட்சியில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதனால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். தற்போது ஊராட்சியை மாநகராட்சியோடு இணைத்தால் எங்களது பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைந்து விடும் என்று தெரிவித்தனர். அதற்கு போலீசார், உங்களது கோரிக்கை குறித்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் மனு அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதனை தொடர்ந்து தர்ணா போராட்டத்தை கைவிட்டு முக்கிய நிர்வாகிகள் மனு கொடுக்க சென்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்