ஓட்டுநர் உரிமங்கள் இனி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்குப் பதிலாக, நேரடியாக வீடுகளுக்கு தபால் மூலம் அனுப்பும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சாலைகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இயக்குவதற்கு ஓட்டுநர் உரிமம் கட்டாயமானதாகும். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஓட்டுநர் உரிமம் பெற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சாலை போக்குவரத்து விதிகள் அறிந்திருப்பதோடு, அது தொடர்பான தேர்வு ஒன்றையும் எழுதி ஓட்டுநர் உரிமம் பெறுவோர் தேர்ச்சி அடைய வேண்டும். அதன் பின்னர் ஆர்டிஓ அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, எல்எல்ஆர் எனப்படும் பழகுநர் உரிமம் பதிவு செய்ய வேண்டும். எல்எல்ஆர்பதிவு செய்த ஒரு மாத காலத்திற்கு பயிற்சி எடுத்துக் கொண்டு, பின்னர் நேரடியாக சென்று வாகனத்தை ஓட்டி காட்ட வேண்டும். வாகன ஆய்வாளர் முன்பு நேரடியாக தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டுமே ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. முன்பு ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு நேரடியாக அன்று மாலையை ஆர்டிஓ அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமங்கள் ஒப்படைக்கப்படும். இந்த முறையில் தற்போது போக்குவரத்து துறை மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.அதன்படி ஓட்டுநர் உரிமத்தில் விண்ணப்பதாரர் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு நேரடியாக தபால் மூலம் ஓட்டுநர் உரிமங்கள் அனுப்பி வைக்கப்படும். வாகன ஆய்வாளர் முன்பு வாகனத்தை ஓட்டி காட்டிய பின்னர், அவர் தேர்ச்சி அடைந்ததை தொடர்ந்து, புகைப்படம் எடுத்துக் கொண்ட பின்னர் தபால் மூலம் ஓட்டுநர் உரிமம் அனுப்பி வைக்கப்படும். முகவரி தவறாக இருக்கும் பட்சத்தில் ஆர்டிஓ அலுவலகத்திற்கு ஓட்டுநர் உரிமம் திரும்ப அனுப்பப்படும். அங்கு சென்று விண்ணப்பித்தவர் மீண்டும் சரியான முகவரியை எழுதிக் கொடுத்து, தபால் மூலம் மட்டுமே ஓட்டுநர் உரிமம் அனுப்பி வைக்கப்படும். நேரடியாக விண்ணப்பதாரரின் கைகளில் ஒப்படைக்கப்பட மாட்டாது. இந்த புதிய திட்டம் இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.