திருச்சி, முசிறி அருகே இரட்டை கொலை- கள்ளக்காதலி உட்பட 2 பேரை வெட்டி சாய்த்தவர் அரிவாளுடன் போலீசில் சரண்…!
திருச்சி மாவட்டம், முசிறி அந்தரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி கீதா (46). கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கணவனைப் பிரிந்த கீதா, தனது இரண்டு மகன்களுடன் தனியாக வசித்து வந்தார். வளையல் வியாபாரம் செய்து வந்த கீதா, முசிறி அருகே வாளவந்தியைச் சேர்ந்த பாலச்சந்திரன் (64) என்பவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆத்திரத்தில் இருந்த பாலச்சந்திரன், இன்று (08-07-2024) காலை 6 மணி அளவில் கீதா வீட்டிற்கு சென்று அவரை அரிவாளால் கழுத்தில் வெட்டினார். இதில், ரத்தம் பீறிட்டு கீழே சரிந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். அதோடு ஆத்திரம் தீராத பாலச்சந்திரன், நில தகராறு காரணமாக அதே ஊரைச் சேர்ந்த ரமேஷ் (55) என்பவரை தலையில் அரிவாளால் வெட்டினார். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த ரமேஷை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் இறந்து விட்டார். இந்த இரட்டை கொலைகளை செய்த பாலச்சந்திரன், ஜம்புநாதபுரம் காவல் நிலையத்தில் அரிவாளுடன் சரணடைந்தார். அதனைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், இந்த இரட்டைக் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து பாலச்சந்திரனை கைது செய்தனர். பாலச்சந்திரன் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இரட்டை கொலை சம்பவம் முசிறி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed.