Rock Fort Times
Online News

டாஸ்மாக் மதுக்கடை பூட்டை உடைத்து மது பாட்டில்களை அள்ளிச் சென்ற கொள்ளையர்கள்- லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.12 லட்சம் தப்பியது…!

மதுராந்தகம் அச்சரப்பாக்கம் அருகே டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு வழக்கம்போல் விற்பனை முடிந்ததும் ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றனர். இன்று(08-07-2024) அதிகாலை 2.30 மணி அளவில் மர்ம கும்பல் மதுக்கடையின் இரும்பு ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே சென்று விற்பனையான பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அவர்கள் அங்கிருந்த லாக்கரை உடைக்க முயன்றும் முடியாததால் மதுபாட்டில்களை பெரிய பையில் அள்ளினர். அந்த நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் அப்பகுதியில் வாகனத்தில் ரோந்து வந்தனர். உடனே மதுக்கடையில் இருந்த கும்பல் அங்கிருந்து மதுபாட்டில்களுடன் தப்பி ஓட்டம் பிடித்தனர். போலீசார் பிடிக்க முயன்றும் முடியவில்லை. போலீசார் மதுக்கடைக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த லாக்கரை கொள்ளையர்கள் உடைக்க முயன்று இருப்பது தெரியவந்தது. மேலும், கடையில் மின் இணைப்பை துண்டித்தும், கண்காணிப்பு காமிராவை உடைத்தும் கைவரிசை காட்டி உள்ளனர். லாக்கரை உடைக்க முடியாததால் மதுபாட்டில்களை பையில் அள்ளி சென்று உள்ளனர். கொள்ளையர்கள் தப்பி ஓடியபோது ஒரு பையில் இருந்த மதுபாட்டில்களை விட்டு சென்று இருக்கிறார்கள். லாக்கரில் ரூ.12 லட்சம் விற்பனை பணம் இருந்தது. லாக்கரை உடைக்க முடியாததால் அந்த பணம் தப்பியது. கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து டாஸ்மாக் மதுபான கடையில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்