Rock Fort Times
Online News

தடைகளை கண்டு பயப்படாதீர்கள்; அதனை தகர்த்து வெற்றி பெறுங்கள்… மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கி முதல்வர் விஜய் பேச்சு..!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜய் ஆண்டுதோறும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைக்கும் மாணவச் செல்வங்களுக்கு விருது வழங்கி வருகிறார். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான முதற்கட்ட பாராட்டு விழா இன்று (04-11-2026) சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது.
இந்த விழாவில் அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த தொகுதி வாரியான சாதனை மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இந்த பிரம்மாண்ட கல்வி விருது விழாவிற்கு தமிழக முதல்வர் விஜய் நேரில் வருகை தந்து மாணவ மாணவிகளுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார். அப்போது அவர் பேசுகையில்,

என் நெஞ்சில் குடியிருக்கும் அன்பான செல்லங்கள், பெற்றோருக்கு வணக்கம். உங்கள் அன்பைப் பெறும் இப்படிப்பட்ட ஒரு வரத்தைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். 2029க்கு இப்பவே தயார் பண்றாரோனு நீங்க நினைக்கலாம். ஆனால், அப்படிலாம் இல்லை. இப்போதைக்கு கட்சி, அரசியல் உங்களுக்கு தேவையில்லை; நல்லா படிங்க. பெரிதாகச் சாதியுங்கள். உங்களை நம்பித்தான் உங்களுடைய பெற்றோர்கள் இருக்கிறார்கள். நானும் உங்களை நம்பித்தான் இருக்கிறேன். தமிழ்நாடே உங்களை நம்பித்தான் இருக்கிறது ஒரு முதல்வராக இந்த நிகழ்ச்சிக்கு நான் வரவில்லை; உங்கள் அண்ணனாக வந்திருக்கிறேன். உங்களுக்கும் சேர்த்துதான் நான் அரசியலுக்கு வந்துள்ளேன்; நான் இங்கு அரசியல் பேச வரவில்லை. லஞ்சம், போதைப்பொருள், ஊழல் பக்கம் சென்று விடாதீர்கள். எதற்கும் அடிமையாகி விடாதீர்கள். நீங்கள் அப்படி இருந்தால் உங்கள் நண்பர்களும் தவறு செய்ய யோசிப்பார்கள். தனித்தன்மையுடன் இருங்கள். உங்களைத் தடுக்க பலர் முயற்சி செய்வார்கள். ஆனால் அந்தத் தடைகளைக் கண்டு பயப்படாதீர்கள். அந்த தடைகளை எல்லாம் தாண்டி நீங்கள் வெற்றி பெற்றால் வயிறு எரிவார்கள். ‘வெந்து தணிந்தது காடு’ என்ற அளவிற்கு அவர்கள் வயித்தெரிச்சல் அடைவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்