Rock Fort Times
Online News

திருச்சி, ராமச்சந்திரா நகரில் உள்ள பட்டாசு கடையில் தீ விபத்து… பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியதால் பரபரப்பு…! (வீடியோ இணைப்பு)

வருகிற 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். இதற்காக தங்களுக்கு தேவையான புத்தாடைகள், இனிப்பு வகைகள், பட்டாசு வகைகள் போன்றவற்றை வாங்கி வருகின்றனர். தீபாவளிக்காக திருச்சி மாநகரின் பல பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில் திருச்சி, ராமச்சந்திரா நகரில் ஒரு பட்டாசு கடை அமைக்கப்பட்டு இருந்தது. அந்த கடையில் இன்று( நவ.5) மதியத்திற்கு மேல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அந்தக் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் நாலாபுறமும் வெடித்து சிதறின. இதனைப் பார்த்ததும் அங்கிருந்து மக்கள் சிதறி ஓடினார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பட்டாசு கடையில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான பட்டாசுகள் நாசமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாநகர பகுதிகளில் அனுமதி பெறாமல் பல பட்டாசு கடைகள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்