Rock Fort Times
Online News

அன்பில் மகேஷ் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நவம்பர் 10ம் தேதிக்கு தள்ளி வைப்பு… நீதிமன்றத்தில் காரசார வாதம்..!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு சென்னை புழல்
சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் நீதிபதி சத்தியமூர்த்தி முன்பு இன்று (நவம்பர் 5) அன்பில் மகேஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது அன்பில் மகேஷ் சார்பிலும் காவல்துறை சார்பிலும் காரசார வாதங்கள் முன் வைக்கப்பட்டன. அன்பில் மகேஷ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபுடு குமார், ‘முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு சொந்தமான இடங்களில் கடந்த செப்டம்பர் 16ம் தேதி காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் செப்டம்பர் 18ம் தேதி சம்மன் அனுப்பி 8 மணி நேரம் அவரிடம் விசாரணை செய்தனர். தொடர்ந்து கடந்த அக்டோபர் 26ம் தேதி அவரை கைது செய்த போலீசார் மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். இந்த மூன்று நாட்களில் அவர் விசாரணையை பாதிக்கும் வகையில் எந்த விஷயத்தையும் செய்யவில்லை. முதல் தகவல் அறிக்கையில் அரசகுமார் மட்டும் 100 கோடி ரூபாய் பணம் பெற்றார் என்று கூறப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் கூட மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கை விசாரிப்பதற்கு அதிகாரம் இல்லை. அமைச்சர் என்ற முறையில் தான் அரசு அதிகாரிகள், தனியார் பள்ளி உரிமையாளர்கள் கூட்டத்தில் அன்பில் மகேஷ் கலந்து கொண்டார். அதேபோன்று தனித்தனியாக சந்திப்பதை தவிர்க்கவே அரசகுமாரை அனைவரும் சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க அன்பில் மகேஷ் அறிவுறுத்தினார். இதை காவல்துறையினர் அவர்களுக்கு ஏற்றார் போல மாற்றிவிட்டனர்.

திருடனை விட்டுவிட்டு திருட்டு பொருளை வாங்கியவனை மட்டும் கைது செய்வது போல காவல்துறை இந்த வழக்கில் செயல்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரை குற்றத்தை ஏற்றுக் கொள்ளுமாறு காவல்துறை கட்டாயப்படுத்துகிறது. பணம் கொடுத்ததாக கூறுபவர்கள் முதலில் அரசகுமாரிடம் கொடுத்ததாக கூறினர். பின்னர் அன்பில் மகேஷிடம் கொடுத்ததாக கூறுகின்றனர். சட்டம் அனைவருக்கும் சமம். அந்த வகையில் பணம் கொடுத்தவர்கள் மீது ஏன் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. பணம் கொடுத்ததாக கூறுபவர்களை சாட்சிகளாக மாற்றியுள்ளனர். முத்துக்குமார் தலைமறைவாக இருந்ததற்கு அன்பில் மகேஷ் தான் காரணம் என்று கூறுவது நகைப்புக்குரியது. தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கவே காவல்துறை விசாரணைக்கு அன்பில் மகேஷ் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். அவர் எங்கும் ஓடி விட மாட்டார். அவருக்கு முன் ஜாமீன் வழங்குமாறு கேட்டுக் கொண்டார். தொடர்ந்து காவல்துறையை சார்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.
“பதிவு செய்யப்படாத சங்கத்தை வைத்து இந்த முறைகேட்டை அரசகுமார் செய்துள்ளார். அன்பில் மகேஷ், அரசகுமார் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளனர்.. இதற்கு ஆதாரங்களும் கிடைத்துள்ளன. அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட இரண்டாவது நாளில் முத்துக்குமார் சரணடைந்துள்ளார் சரவணன் என்பவர் பணத்தை பெற்று சென்றதற்கான வீடியோ ஆதாரங்கள் உள்ளன. அதேபோன்று 400 கோடி ரூபாய் பணம் வாங்கப்பட்டதற்கான ஆதாரங்களும் உள்ளன. தற்போது சரவணன் தலைமறைவாக இருக்கிறார். முத்துக்குமார் பணத்தை பெற்று சரவணன் மூலமாக அன்பில் மகேஷுக்கு கொடுத்திருக்கிறார்.இந்த வழக்கு தொடர்பாக தொடர் விசாரணை செய்ய வேண்டி உள்ளதால் அன்பில் மகேஷின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் வருகிற நவம்பர் 10ம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்தார். நவம்பர் 8ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்பில் மகேஷ் புழல் சிறையிலேயே இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்