Rock Fort Times
Online News

“அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது தான் உண்மையான ஜனநாயகம்”- திருச்சியில் திருமாவளவன் பேட்டி…!

திருச்சிக்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-  மது ஒழிப்புக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மாநாட்டை  ஏன் நாம்  மாநாடாக பார்க்க வேண்டும். அனைவரும் சேர்ந்து குரல் கொடுப்போம்.  இது ஒரு சமூக பிரச்சினை.  வெறும் அரசியல் கணக்கு போட்டு பார்ப்பது இந்த பிரச்சனையின் தீவிரத்தை குறைத்து மதிப்பிடுவதாக இருக்கிறது.  எல்லோரும் சேர்ந்து குரல் கொடுப்போம்.  போதையில்லா ஒரு தேசத்தை உருவாக்க முயற்சிப்போம்.  போதைப்பொருள் கடத்துவதில்  மாபியா கும்பல் தேசிய அளவில்  தீவிரமாக வேலை செய்து வருகிறது.  அயல்நாடுகளில் இருந்து போதைப்பொருள்  இறக்குமதி செய்யப்படுகிறது. உள்நாட்டிலேயே மாநிலம் விட்டு மாநிலம் போதை பொருள் கடத்தப்படுகிறது.  ஏழை,எளிய மக்கள் விளிம்பு நிலை மக்கள்  பரவலாக வசிக்கக் கூடிய இடத்தில் இன்றைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் புழக்கத்தில் உள்ளது.  இவையெல்லாம் தேசத்தின் மனித வளத்தை பாழாக்குகிறது.  போதை ஒழிப்பில் நாங்கள் பிஎச்டி  என்ற அன்புமணியின் விமர்சனத்திற்கு பதில் அளித்த அவர்  சமூக பொறுப்புணர்வு இருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொண்டால் போதும் என்று கூறினார். மேலும் அவர் கூறும்பொழுது  சமூக வலைத்தளத்தில் தனது பதிவுகள்  அழிக்கப்பட்டதாக  எனக்கு தகவல் தெரிந்த பிறகு முறையாக பதிவு செய்யுமாறு எனது அட்மினுக்கு
அறிவுறுத்தியுள்ளேன்.

நான் அனைத்து நேரங்களிலும் பதிவு போட இயலாது. நான் தலைமை பொறுப்பேற்ற பிறகு பத்தாண்டு காலம் தேர்தலை புறக்கணித்து உள்ளோம். ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்தை தொடர்ச்சியாகவே சொல்லி வருகிறோம்.இதனை மறைமலைநகர் செயற்குழு கூட்டத்திலும் மேற்கோள் காட்டி பேசினேன். தேர்தல் நிலைப்பாடு வேறு, மக்களின் பிரச்சினைகளுக்காக போராடுவது வேறு என்பதை அந்த மண்டல செயற்குழுவில் நான் விளக்கி பேசிய ஒரு வீடியோ தான் அது.  பழைய வீடியோ அல்ல புதிய வீடியோ தான் அது. மது ஒழிப்பு மாநாடு நடத்துவது எந்த அரசியல் நோக்கமும் இல்லை.  1977 ம் ஆண்டுமுதல் மத்தியில் கூட்டாட்சியே நிலவி வருகிறது.  பாஜக தனி பெரும்பான்மையுடன் இருந்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு  அதிகார பகிர்வு அளிக்கப்படுகிறது.  தமிழ்நாட்டில் அவ்வாறு நடப்பதும் தவறல்ல.  அந்த கோரிக்கையை நாங்கள் எழுப்புவதிலும் தவறில்லை.  இந்த கருத்தை வலியுறுத்தி தமிழ்நாட்டில் 2016 ம் ஆண்டு ஒரு கருத்தரங்கமே விசிக நடத்தியுள்ளது.  அதில், தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை வலியுறுத்தி ஒரு புத்தகமும் வெளியிட்டுள்ளோம்.  இதனால், யாரையும் மிரட்டுவது என்பது அர்த்தமல்ல.  அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது தான் உண்மையான ஜனநாயகம்.  அதிகாரத்தை குவிப்பது ஜனநாயகம் அல்ல.  அதிகார பகிர்வை மையமாக வைத்து திட்டமிட்டு விசிக செயல்படவில்லை. வரும் 2026 தேர்தலில் திமுக கூட்டணியில் தொடருமா? என்ற கேள்விக்கு தேர்தல்  வரும்போது பதில் சொல்கிறேன்.  இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்