டெல்லியில் வருகின்ற ஜூன் 8-ம் தேதி இண்டியா கூட்டணிக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் பங்கேற்கும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என திமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் வருகின்ற ஜூன் 8-ம் தேதி நடைபெறும் இண்டியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்துக்கு திமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திமுகவை பொறுத்தவரை நீட் தேர்வு, தொகுதியில் மறுசீரமைப்பு, அவசர அவசரமாகத் தேர்தல் நேரத்தில் திணிக்கப்பட்ட எஸ்ஐஆர், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள், ஒரே நாடு – ஒரே தேர்தல், வக்பு சட்டம் உள்ளிட்ட ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரான அனைத்திற்கும் தொடக்கம் முதலே, முதல் அரசியல் இயக்கமாகத் துணிச்சலுடன் எதிர்த்து நின்றது. இண்டியா கூட்டணி தொடங்கியதிலிருந்து அக்கூட்டணியின் மையச் சக்தியாக திமுக இயங்கியது. அதன் தலைவர் மு.க.ஸ்டாலின்தான் நாட்டு மக்களுக்கான முக்கியப் பிரச்சினைகளில் முதன்மைக் குரல் எழுப்பி வந்தார். இதை இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும், அக்கட்சிகளின் தலைவர்களும் நன்கு அறிவார்கள்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்குபின், காங்கிரஸ் கட்சி, திமுகவுக்கு இழைத்த துரோகத்தினால் மிகுந்த மனக்காயமுற்றிருக்கும் கட்சியினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற வகையில், ஜூன் 8-ம் தேதி டெல்லியில் நடைபெறும் இண்டியா கூட்டணிக் கூட்டத்தில், அதாவது காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்காத அதேநேரத்தில், இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலனைப் பாதிக்கும் பிரச்சினைகளில், திமுக என்றைக்கும் குரல் கொடுக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.