Rock Fort Times
Online News

” கள்ளச்சாராய மரணங்கள் ” – ஆளுநரை சந்தித்தபின் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி !

கள்ளகுறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து மனு கொடுத்தார். பின்னர் ஆளுநர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், “கள்ளகுறிச்சியில் இத்தனை உயிர்கள் போனபின்பு, இன்றைக்கு இந்த அரசு ஆயிரக்கணக்கான லிட்டர் சாராயத்தை அழித்துவிட்டதாகக் கூறுகிறது. இப்போது எடுத்த இந்த நடவடிக்கைகளை முன்கூட்டியே ஏன் எடுக்கவில்லை? போன வருடம் இதேபோன்ற நிகழ்வு நடந்தது. அதன்பிறகு சரியான நடவடிக்கை எடுத்து தடுத்திருந்தால் இத்தனை உயிர்களை நாம் இழக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.அரசாங்கம் என்ன செய்கிறது?. கள்ளச் சாராயம் வரக்கூடாது என்பதற்காகத்தான் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அப்படி இருக்கும்போது கள்ளச் சாராயம் மீண்டும் ஏன் வருகிறது? இதற்கு யார் துணை போகிறார்கள்? ஆட்சியாளர்கள், அதிகாரிகள், காவல்துறை துணையில்லாமல் நிச்சயமாக கள்ளச் சாராயம் காய்ச்ச முடியாது. ஆட்சியாளர்கள், அதிகாரிகள் உதவியோடு தான் கள்ளச் சாராயம் காய்ச்சப்படுகிறது, விற்கப்படுகிறது என்று கள்ளக்குறிச்சி மக்கள் சொல்கிறார்கள். ஆளுங்கட்சியின் உதவியோடுதான் இதெல்லாம் நடக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. மக்களின் வறுமையை பயன்படுத்தி கள்ளச் சாராயம் போன்ற போதை வஸ்துகளை விற்று தமிழகத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளனர். இது குறித்து ஆளுநரிடம் முறையிட்டுள்ளோம். கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.
மதுபான ஆலைகளை மூட வேண்டும். சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவி விலக வேண்டும்.என நாங்கள் சொன்னதை ஆளுநர் மிக கவனமாகக் கேட்டார்.
தமிழகத்தின் எதிர்காலம் எதை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்று ஆளுநர் மனவருதத்தோடு தெரிவித்தார். இது கவலைக்குரிய விஷயம் எனக்கூறி எங்களிடம் வருத்தப்பட்டார்.” என பிரேமலதா கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்