திருச்சி மாவட்டம், கல்லக்குடி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட தாப்பாய் பகுதியில் திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, தாப்பாய் ஏரிக்குள் ஒரு கேனில் 4 லிட்டர் கள்ளச்சாராயத்தை வைத்து விற்பனை செய்துகொண்டிருந்தவர் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அங்கு பிளாஸ்டிக் பேரலில் 200 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் இருந்தது. அவற்றை கைப்பற்றி அழித்த போலீசார், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றது கல்லக்குடி மேட்டு தெருவை சேர்ந்த தனபால்( வயது 43) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் தனபால் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் கொண்டவர் என்பதாலும், அவர் ஜாமீனில் வெளியே வந்தால் தொடர்ந்து சாராயம் விற்பார் என்பது தெரியவந்தது. இதனால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில், தனபாலை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் ஐஏஎஸ் உத்தரவிட்டார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.